“இளையராஜா மீது விமர்சனங்கள் உண்டு. ஆனால்...” - பா.ரஞ்சித் பகிர்வு

By கலிலுல்லா

“இளையராஜா மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. ஆனால், அதையும் தாண்டி அவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானல்ல. ஒருமுறை அவர் பாடலை கேட்டு கண்ணீர் சிந்தியிருக்கிறேன்'' என்று இயக்குநர் பா.ரஞ்சித் கூறினார்.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள திரைப்படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. இந்தப் படத்தில் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இவர்களுடன், 'டான்சிங் ரோஸ்' ஷபீர், கலையரசன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்கு டென்மா இசையமைத்துள்ளார். இப்படத்தை யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்காக தயாராக இருக்கும் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கவனத்தைப் பெற்றது. படம் நாளை ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், படம் தொடர்பாக நடந்த ட்விட்டர் ஸ்பேஸில், நெட்டிசன்கள் கேட்ட கேள்விகளுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் பதிலளித்தார். அப்போது அவர், ''படத்தின் கதாபாத்திரங்களை நான் இந்த சமூகத்திலிருந்தே எடுத்துக்கொள்கிறேன். சமூகத்தை சரியாக புரிந்துகொண்டால்தான் அதன் கதாபாத்திரங்களை திரையில் எதிரொலிக்க முடியும். மனிதர்களிடம் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு இருக்கிறது. சூழ்நிலைதான் எமோஷனை உருவாக்குகிறது. தனித்து எதையும் உருவாக்க முடியாது. நானும் என் படங்களில் சூழ்நிலைகளை ஒட்டியே ஒரு நகைச்சுவையோ மற்ற எமோஷன்களையோ அமைக்கிறேன்.

தவிர, இங்கே இது வர வேண்டும் என நோக்கத்துடன் எந்த காட்சியும் வைக்கப்படுவதில்லை. அதேபோல, ஒரு படம் மக்களை எங்கேஜ் செய்வது மிகவும் முக்கியம் என கருதுகிறேன். அதுதான் பொழுதுபோக்கை உருவாக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

தொடர்ந்து விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என கேட்கும்போது, ''பொதுவாக ஆரோக்கியமான விமர்சனங்களை விரும்பி படிக்கவோ, கேட்கவோ செய்வேன். விமர்சனங்கள் புதிய பார்வையை உருவாக்கும். அதனை நான் விரும்புகிறேன். அந்த விமர்சனங்கள் தான் என்னை சரியான சினிமாவை எடுக்க உந்தித்தள்ளுகிறது. விமர்சனங்களில் உள்ள ஆரோக்கியமான விஷயங்களை எடுத்துகொள்வேன். அவதூறுகளை ஒருபோதும் கண்டுகொள்வதில்லை. விமர்சனங்கள் அடுத்து நான் கதை எழுதும்போது பயன்பட்டிருக்கிறது. விமர்சனங்கள் என்னை சரியான திசை நோக்கி செலுத்துகிறது'' என்றார்.

காலா படம் குறித்து பேசுகையில், ''காலா எந்தவித சமரசமும் இல்லாமல் அரசியலை நேரடியாக பேசிய படம். ஆனால், அந்த படத்திற்கான உரையாடல் முழுமையாக சென்று சேராததற்கு அப்போதிருந்த அரசியல் சூழல் காரணமாக இருக்கலாம்'' என்றார்.

நட்சத்திரம் நகர்கிறது படத்தின் விமர்சனம்: நட்சத்திரம் நகர்கிறது Review: அன்பு, அரசியல், புதுவித திரை அனுபவம்!

சாதி ரீதியாக படங்களை அணுகுபவர்கள் குறித்து பேசும்போது, ''ஜாதியால் வெறும் எஸ்சி பிரிவு மக்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அப்படியான ஒரு பார்வை இருக்கிறது. ஆனால், ஒரு ஊரில் ஒரு சில ஜாதிகள் இருக்கும்போது, அவர்களுக்குள்ளேயே பெண் கொடுத்து பெண் எடுக்கமாட்டார்கள். அவர்களுக்குள் இருக்கும் பிரிவினைகள் குறித்து அவர்களே யோசிப்பதில்லை. மாறாக அதை ஏற்றுக்கொள்ள பழகிவிட்டனர். இடைநிலை சாதிகளிடம் இருந்த சினிமா தலித் மக்களிடம் செல்லும்போது மட்டும் வேறு மாதிரியாக பார்க்கப்படுகிறது.

தமிழ் கலாசாரம் சாதியின் அடிப்படையில் இயங்குகிறது என்பதை சொல்லும்போது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சாதி எதிர்ப்பு மனநிலை சினிமாவில் பூதாகரமாகும்போது, எதிர்ப்பு மனநிலையில் இருப்பவர்கள் பேசுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. சாதி எதிர்ப்புக்கும், ஆதரவுக்கு நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இளையராஜா மீது இந்த சமூகம் இப்போது வைக்கும் விமர்சனத்தை நானும் ஒருகாலத்தில் வைத்துள்ளேன். அவரது திறமை குறித்து பேசும்போது, 'கடவுளிடமிருந்து வருகிறது' என்று கூறியிருப்பார். அதில் நான் முரண்பட்டு நின்றிருக்கிறேன். பல்வேறு விஷயங்களில் அவரிடமிருந்து முரண்பட்டிருக்கிறேன். ஆனால், அவர் கடந்து வந்த பாதையை ஆய்வுபடுத்தும்போது, அரசியல்ரீதியாக அவர் பல்வேறு தளங்களில் விமர்சிக்கப்பட்டுள்ளார். இந்தி இசை ஆதிக்கம் செலுத்திய காலத்தில் இளையராஜாவின் பங்கு முக்கியமானது. ஒருமுறை தமிழகத்தில் பிரபலமான வாரப் பத்திரிக்கை அது. நாயகன் படம் வந்தபோது, இளையராஜா இசைதான் படத்திற்கு மைனஸ் என்றனர். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படி பல்வேறு காலக்கங்களில் அவர் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக விமர்சிக்கப்பட்டுள்ளார்.

ஒருமுறை கல்லூரியில் படித்துகொண்டிருக்கும்போது மதுரை சென்றிருந்தேன். பதற்றமான அரசியல் சூழல் நிகழ்ந்துகொண்டிருந்த நேரம் அது. அப்போது அங்கே இளையராஜா குரலில் பாடலை கேட்டதும் கண்ணீர்விட்டு அழுதேன். அதற்கான காரணம் தெரியவில்லை. அப்படியான இசை அவருடையது. எனவே 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் இசைஞானியாக அவரை எடுத்துக்கொண்டேன். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை இதில் கொண்டு வரவில்லை. இன்றைக்கும் எனக்கு அவர் மீது விமர்சனங்கள் இருக்கிறது. ஆனால், அவரை விமர்சிப்பதற்கு பின்னால் இருக்கும் அரசியலை கவனிக்க வேண்டியிருக்கிறது'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்