“திரைத் துறையில் பலரும் நினைப்பது போல் நான் இல்லை” - நித்யா மேனன் பகிர்வு

By செய்திப்பிரிவு

'திரைத் துறையில் உள்ள பலரும் நான் திமிர் பிடித்தவள் என நினைக்கிறார்கள். ஆனால், அதில் உண்மை இல்லை' என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

சித்தார்த் நடிப்பில் வெளியான '180' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நித்யா மேனன்.தொடர்ந்து 'வெப்பம்', 'மாலினி 22 பாளையங்கோட்டை', 'ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை' ஆகிய படங்களில் நடித்தார். குறிப்பாக மணி ரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி' படம் அவருக்கு தனி அடையாளத்தை பெற்றது தந்தது. படம் திருப்புமுனையாக அமைந்தது. அந்த வகையில் அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில் நித்யா மேனனின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

மலையாளத்தில் 'தக்‌ஷினம் ஒரு பெண்குட்டி' படப்பிடிப்பு தளத்தில் நித்யா மேனன் தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க மறுத்ததாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் திமிர் பிடித்தவர் என்றும், அதனால் மலையாள படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என கூறி சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் தெரிவித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள நித்யா மேனன், "நான் மிகவும் திமிர் பிடித்தவள் என்று திரைத் துறையில் உள்ள பலர் நினைக்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. சினிமா துறையில் எனக்கு நிறைய எதிரிகள் உள்ளனர். அவர்கள் விரும்பியபடி நான் செய்யாதபோது அவர்கள் எனக்கு எதிராக பொய்களைப் பரப்புகிறார்கள்.

நமது வளர்ச்சியை பார்க்க முடியாதவர்கள், நம்மை கீழே தள்ள முயற்சி செய்கிறார்கள். இதுவரை என்னுடன் நடித்தவர்கள் யாரும் என்னுடன் பணியாற்றுவது செய்வது கடினம் என்று கூறியதில்லை. ஆனால் நான் வளரும்போது என் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை நானே நேரடியாகச் சொல்ல இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவேன் என்று நினைத்தேன். அதற்கான எந்தத் திட்டமும் என்னிடம் இல்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE