“ஸ்டார்களை விற்கிறது பாலிவுட்... கதைகளைச் சொல்கிறது தென்னிந்திய சினிமா” - அனுபம் கேர்

By செய்திப்பிரிவு

''பாலிவுட்டையும், தென்னிந்திய படங்களையும் பிரித்துப் பார்க்கவில்லை. தென்னிந்திய படங்களில் கதையைச் சொல்கிறார்கள். ஆனால் பாலிவுட்டில் நட்சத்திரங்களை விற்பனை செய்கிறார்கள்'' என பாலிவுட் நடிகர் அனுபம் கேர் கருத்து தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக பாலிவுட் படங்கள் மோசமான தோல்விகளை சந்தித்து வருகின்றன. இதனால், பாலிவுட் திரையுலகம் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அண்மையில் பேசிய நடிகர் அக்‌ஷய் குமார், 'இது எங்கள் தவறு தான். குறிப்பாக என் தப்பு. சிறந்த படங்களை தர முயற்சிக்கிறேன்'' என தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் தற்போது பாலிவுட்டின் இந்த வீழ்ச்சி குறித்து பாலிவுட் நடிகர் அனுபம் கேர் கூறுகையில், ''கூட்டு முயற்சிதான் சிறந்த படங்களை உருவாக்குகிறது என்பதை தெலுங்கு படத்தில் பணியாற்றும்போது கற்றுக்கொண்டேன். தெலுங்கில் மற்றொரு படத்திலும் நடித்திருக்கிறேன். தமிழில் ஒரு படம் நடித்திருக்கிறேன். அடுத்து மலையாள படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன்.

தென்னிந்திய படங்கள் வசூலில் சாதனை படைக்கிறது என்றால், அவர்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், பாலிவுட் படங்களை பொறுத்தவரை அவை பெரும்பாலும் நட்சத்திரங்களை மையமாக வைத்தே எடுக்கப்படுகின்றன. நீங்கள் பார்வையாளர்களுக்காகப் படங்களைத் தயாரிக்கிறீர்கள்.

பார்வையாளர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாதபோதுதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. பாலிவுட்டையும், தென்னிந்திய படங்களையும் பிரித்துப் பார்க்கவில்லை. தென்னிந்திய படங்களில் கதையைச் சொல்கிறார்கள். ஆனால் பாலிவுட்டில் நட்சத்திரங்களை விற்பனை செய்கிறார்கள்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE