எதிர்காலமும், இறந்த காலமும் நம் பக்கத்திலேயே இருக்கும். ஆனால், எல்லோரின் கண்களுக்கும் தெரியாது. அப்படித் தெரிந்தால்..? அது தான் 'டைரி'. மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் பாதையில் உள்ள 13-வது கொண்டை ஊசி வளைவில் அதித விபத்துகள் நடைபெறுகின்றன. அதையொட்டி பல மர்மக் கதைகளும் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் நிலுவையிலிருக்கும் இந்த வழக்குகள் பயிற்சி காவலரான அருள்நிதி கைக்கு வந்து சேர, அவர் இது தொடர்பான விசாரணையில் இறங்குகிறார். பல திருப்பங்களைக் கொண்ட இந்த வழக்கில் இறுதியில் என்ன நடந்தது என்பது தான் 'டைரி' சொல்லும் கதை.
படத்தின் மையக்கரு உண்மையில் சுவாரஸ்யமானது. குறிப்பாக, படத்தின் இறுதிக் காட்சி நம்மை நெகிழவைக்கும் அதேசமயம் பேரார்வமூட்டுகிறது. படத்தின் பெரும் பலமே கடைசி ஒரு மணி நேரம்தான். அந்த ஒரு மணிநேரத்தை ஈடுக்கட்டுவதற்காக சுற்றி எழுப்பப்பட்ட சுவர்தான் மீதி நேர திரைக்கதை. எதிர்பார்ப்புடன் பாப்கார்னை எடுத்துக்கொண்டு திரையரங்கிற்குள் நுழைபவர்களுக்கு முதல் காட்சி மிரளவைக்கிறது. இனி பாப்கார்னுக்கு வேலையிருக்காது என அதை எடுத்து ஓரங்கட்டினால், அடுத்தடுத்து வரும் தேவையில்லாத காதல் பாடல், அயற்சி தரும் விசாரணை மீண்டும் பாப்கார்னை கையில் சேர்த்துவிடுகிறது.
முதல் பாதி முழுக்க கதையோட்டத்திற்கு எந்த வகையிலும் நியாயம் சேர்க்காத காட்சிகளே நிறைந்து கிடக்கின்றன. தவிர, 'இது ஏன் இப்படி சம்பந்தமே இல்லாம நடக்குது' நிறைய கேள்விகளையும், லாஜிக் மீறல்களையும் எழுப்பி விடுகிறது. ஆனால், இது எல்லாவற்றுக்கும் சேர்த்து நம்மை ஆச்சரியப்படுத்திவிடுகிறது படத்தின் கடைசி ஒரு மணி நேரம். முதல் பாதியில் லிமிடட் எடிஷன் போல அருள்நிதிக்கு குறைந்த காட்சிகளே ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் இரண்டாம் பாதியில் மிரட்டி விடுகிறார்.
» “நேரடியாக ஓடிடியில் வெளியிட நினைத்தேன்” - ‘ஜெர்ஸி’ தோல்வி அனுபவம் பகிர்ந்த ஷாஹித்
» 7 கெட்டப்களுடன் சர்ப்ரைஸ் தரும் விக்ரம் - வெளியானது ‘கோப்ரா’ ட்ரெய்லர்
போலீஸ் கட்டிங், கம்பீரமான உடல், வலிந்து சிரிக்கத் தெரியாத உடல்மொழி என தனது வழக்கமான நடிப்பை இந்தப் படத்திலும் பதியவைக்க அவர் தவறவில்லை. அறிமுக நாயகியாக நடித்திருக்கும் பவித்ரா மாரிமுத்து நடிப்பில் தேர்ச்சி பெறுகிறார். ஆனால், இன்ட்ரோ காட்சியில் போலீஸ் என 'கெத்து' காட்டுவதற்காக காவல் நிலையத்தில் வைத்து குற்றவாளியை அடிக்கும் அவர், 5 பேர் ஒன்று சேரும்போது ஹீரோவின் உதவியை நாடுகிறார். பெண்களைக் காக்க எப்போதும் நாயகர்கள் தான் மீட்பர்களாக வர வேண்டுமா இயக்குநர் இன்னிசை பாண்டியன் அவர்களே? (பெண்கள் போலீசாகவே இருந்தாலும்). ஜெயப்பிரகாஷ், சாரா, தனம் உள்ளிட்ட பலரும் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளன்னர்.
ஸ்லோவாக நகரும் திரைக்கதையில் இடைவேளையில் வரும் திருப்பம், இரண்டாம் பாதி ட்விஸ்ட்டுகள் வேகமெடுக்க உதவுகின்றன. குறிப்பாக பேருந்துக் காட்சிகள் முழுமையாக பார்வையாளர்களை எங்கேஜ் செய்கின்றன. தற்போதைய கதாபாத்திரங்களை கடந்த காலங்களுடன் இணைத்திருந்த விதம் அதற்கான எழுத்து புதுமையாகவும், ஆழமாகவும் இருந்தது படத்தை வெகுவாக ரசிக்க வைத்தது. பேருந்தில் ஏறும் காதல் ஜோடிக்கு அதிலிருக்கும் பயணிகள் இணைந்து திருமணத்தை நடத்திவைப்பது, அங்கு நடக்கும் சில மொக்கையான உரையாடல்கள் அயற்சி.
ஊட்டி, மேட்டுப்பாளையத்தின் குளிரையும், விபத்தின் வீரியத்தையும், குறிப்பாக இரண்டாம் பாதியில் பேருந்துக்குள்ளேயே நகரும் காட்சிகளில் கேமரா கோணங்களால் கண்களை கட்டிப்போடுகிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங். இசையமைப்பாளர் ரான் ஈதன் யோஹான் பின்னணி இசை ஹாரர் காட்சிகளில் பயத்தை கூட்டிருக்கிறது.
மொத்தத்தில் இந்த 'டைரி'யில் எழுதப்பட்டுள்ள கடைசி சில பக்கங்களின் திரைக்கதையே அதன் எடையை கூட்டியிருக்கிறது. இறுதிப் பக்கங்களின் சுவாரஸ்யம், விறுவிறுப்புக்காகவும், அத்தோடு இறுதியில் வரும் பாடல் ஒன்றுக்காகவும் 'டைரி'யை படித்துவிடலாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago