ரோமன் போலன்ஸ்கி: திகில் உலகின் முரண்களை வடித்த மாபெரும் படைப்பாளி | Roman Polanski Bday Spl

By பால்நிலவன்

ரோமன் போலன்ஸ்கி - உலக சினிமா அரங்குகளில் அதிர்வை உண்டாக்கிய பெயர். உலகின் நல்ல சினிமாவைத் தேடும் பார்வையாளர்கள் இன்றைக்கும் உச்சரிக்கும் ஒரு முன்னுதாரண படைப்பாளி.

போலன்ஸ்கி திரைக்கதையாக்கங்கள் பலவும் பார்வையாளர்களின் முன்னே உட்கார்ந்திருக்கிறார்கள் என்கிற கவனத்தோடு சிறிதும் தொய்வின்றி அதேநேரம் தீவிர கலையமைதி கொண்டு உருவாக்கப்பட்டவைதான். அதற்காக அவர் எடுத்துக்கொண்டது ‘உளவியல் த்ரில்லர்’ என்கிற நுட்பமான திரைவகைமையாகும். 'நைஃப் இன் தி வாட்டர்' தொடங்கி, 'சைனாடவுன்', 'தி பியானிஸ்ட்' என அவரது பெரும்பாலான படங்கள் உளவியல் த்ரில்லர் படங்கள்தான்.

திரைப்பட இயக்குநர் என்றால் தானே ஒரு கதையை உருவாக்க வேண்டும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் (அல்லது எழுத்து இயக்கம் என்று ஸ்டைலாக ) என்று நம்ம ஊர் இயக்குநர் போட்டுக்கொள்வதுபோல் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை... உரிய திரைக்கதை ஆசிரியர்கள், சிறந்த நாவல்கள், கிளாஸிக் காவியங்களை எடுத்துக்கொண்டு அதற்கு உரியவர்களுக்கு கிரெடிட் கொடுத்து அக்கதையை எடுத்துச் சொல்லப்போகும் உத்தி சிறப்பாக இருந்தால் வெற்றி நிச்சயம் என்று நிரூபித்துக் காட்டியவர்.

தனது வித்தியாசமான முயற்சிக்காக தனது ஆரம்ப கால திரைப்படக் கல்லூரி நண்பர்களான ஜேக்கப் கோல்டுபெர்க், ஜெர்ஸி ஸ்கோலிமோஸ்கி போன்றவர்களின் திறமைகளுக்காக அவர்களுக்கு உரிய கிரெடிட் தந்து அவர்களை தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டவர் போலன்ஸ்கி. அவரது முதல் படம் ‘நைஃப் இன் தி வாட்டர்’ திரைப்படமே அவர்கள் இருவரின் துணையோடு உருவாக்கப்பட்டதுதான். இப்படம் எண்ணி மூன்றே மூன்று கதாபாத்திரங்கள்... இதே மூன்று கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு இதே திரைப்படத்தின் அடிநாத திரைக்கதையை எக்கச்சக்கமாக மாற்றி தமிழில் எடுக்கப்பட்டதுதான் கே.பாலசந்தரின் 'மூன்று முடிச்சி'. ‘நைஃப் இன் தி வாட்டர்’ கடலில் ஒருநாள் கதையாக முழுவதும் காட்சி ரீதியானது என்றால் ‘மூன்று முடிச்சு’ ஒரு பெரிய வாழ்க்கைக் கதையாக வசனங்களால் முழுமைபெற்ற நாடகமாக உருவம் பெற்றிருக்கும்.

சிறந்த இலக்கியகர்த்தாக்களின் அனுபவம் வாய்ந்த கதைகளே சிறந்த படத்தை உருவாக்க முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் போலன்ஸ்கி. அவரது படங்கள் ரோலன்ட் டாப்போர், ஐரா லெவின், சார்லஸ் டிக்கன்ஸ், தாமஸ், ஹார்டி, பாஸ்கல் புரூங்கர், ராபர்ட் ஹாரீஸ், யாஸ்மினா ரேஸா, டேவிட் இவெஸ், டால்பின் டி விகான் போன்ற ஆங்கில, பிரெஞ்சு நாவலாசிரியர்கள், நாடகாரியர்களின் படைப்புகளைக் கொண்டுதான் உருவாக்கப்பட்டன.

இத்திரைப்படங்கள் பலமுறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது. தங்கக் கரடி, கோல்டன் குளோப் விருதுகள், BAFTA விருதுகள் பெற்றுள்ளன. இவரது படத்தில் பங்கேற்றவர்களில், சைனாடவுனின் சிறந்த திரைக்கதைக்காக ராபர்ட் டவுனே, ரோஸ்மேரி பேபியில் நடித்த ரூத் கோர்டன் சிறந்த உறுதுணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெற்றவர்கள்.

‘தி பியானிஸ்ட்’ படத்திற்காக சிறந்த இயக்கம், சிறந்த கதை, சிறந்த நடிப்பு என்று மூன்று ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன.

இரண்டாம் உலகப் போரின் கோரத் தாக்குதலுக்கு ஐரோப்பா மாபெரும் இழப்புக்குத் தள்ளப்பட்ட காலம் அது. அப்போது நாஜி படையினரின் தாக்குதலுக்கு போலந்து தலைநகர் வார்ஸாவும் இரையாகிறது. விலாடிஸ்லா ஸ்பில்மேன் என்ற உன்னதமான ஓர் இசைக்கலைஞனின் வாழ்விலிருந்துதான் இத்திரைப்படத்தின் பக்கங்கள் புரட்டப்படுகின்றன.

வார்ஸா நகரின் மக்கள் நாஜி வதைமுகாமுக்கு கூட்டம் கூட்டமாக ரயிலில் ஏற்றி அனுப்பப்படுகிறார்கள். பலர் வீதிகளிலேயே கொல்லப்படுகிறார்கள். அங்கேயே பிணங்களைக் குவித்து கொளுத்துகிறார்கள். குடும்பத்தினரோடும் சக இசைக் கலைஞர்களோடும் சேராமல் அவர்களைத் தவறவிடுவதோடு இவன் தனித்தும் விடப்படுகிறான். இதனால் யூதரல்லாத சில நண்பர்கள் மூலம் சில காலம் சில இடங்களில் தப்பி வாழ்கிறான். ராணுவத்தினரின் நெருக்கடிகளிலிருந்து மறைந்து வாழ்கிறான். நல்ல சாப்பாடு கிடையாது. நல்ல தூக்கம் கிடையாது. நல்லது கெட்டது பேசிக்கொள்ள யாருமில்லை. அந்த வாழ்க்கையில் மௌனமும் வலியும், தனிமையும், மனச்சோர்வும், சோகமும் ஏமாற்றமும், அச்சமும் அவனை ஆட்டிப் படைக்கிறது.

வார்ஸாவில் 1939-ல் தொடங்கிய போர் 1945-ஆம் ஆண்டு முடிவுக்கு வரும்வரை இசைக்கலைஞன் தனிமையில் அங்குதான் வசிக்கிறான். நாஜி படையினரால் யூத மக்கள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்ட நிலையில் கட்டிடங்கள் எல்லாம் பீரங்கிகளால் தாக்கப்பட்ட அந்த நகரமே எரிந்து கிடக்கிறது. இத்தனை ஆண்டுகளில் அவன் தப்பி உயிர் பிழைத்தாலும் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். போரில் சிக்கிக்கொண்ட ஒரு மனிதனின் எதிர்கொள்ளும் நாட்கள் அடுத்தது என்ன என்ற திகிலோடு கூடிய அச்சத்தோடுதான் இப்படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

விறுவிறுப்பான திரைக்கதையாக்கிய ரொனால்ட் ஹார்வுட்டுக்கு, சிறந்த நடிப்புப்பான ஆஸ்கர் விருதை ஆட்ரியன் புரூடியும் பெற்றனர். இவருடைய பல படங்களுக்கும் சேர்த்து இதுவரை எட்டு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது என்பது போகிற போக்கில் கிடைக்கும் கவுரவமல்ல.

தனது தாயின் இரண்டாவது கணவருக்கு பிள்ளையாக பிறந்தது, இரண்டாம் உலகப் போரில் வதைமுகாமில் தந்தை பலியாவதைக் கண்டு ஏதும் செய்யமுடியாமல் தத்தளித்தது, சில காலம் வதைமுகாமில் சிக்கி பின்னர் தப்பிப் பிழைத்தது என அவரது வாழ்வில் நிறைய சிக்கல்கள். போலன்ஸ்கியின் திருமண வாழ்விலும் நிம்மதியிலலை. பிற்காலத்தில் பாலியல் வழக்கில் சிக்கி அமெரிக்கா அவரை நாடு கடத்துகிறது. அங்கிருந்து தப்பித்து பிறந்த வளர்ந்த பாரீஸ் நகருக்கு வருகிறார். சிலகாலம் லண்டன் வாழ்க்கை.

பல்வேறு சிக்கல்களைக் கொண்ட சொந்த வாழ்க்கையை மனதில் ஏற்றிக்கொள்ளாமல் தனது படைப்புகளை அதுவும் பிரமாண்ட வெற்றிப் படங்களை தந்து வருவதுதான் ஒரு மாபெரும் கலைஞனுக்கு உள்ள மனோபலம் என்பதை அவரது சாதனைகளால் அறியமுடிகிறது. 1933-ல் பிறந்த போலன்ஸ்கி, தனது 90-வது வயதிலும் அவர் தொடர்ந்து வேலை செய்துவருகிறார். வரும் நவம்பரில் வர இருக்கும் அவரது புதிய படத்தின் பெயர் தி பேலஸ்.

| இன்று ஆகஸ்ட் 18 - ரோமன் போலன்ஸ்கியின் பிறந்தநாள் |

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE