“எங்கள் அமைதியை சிலர் பயன்படுத்திக்கொள்கிறார்கள்” - ‘புறக்கணிப்பு’ பிரச்சாரத்துக்கு எதிராக அர்ஜூன் கபூர்

By செய்திப்பிரிவு

புறக்கணிப்பு பிரசாரத்துக்கு எதிராக பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர் கோபமாக தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

ஆமீர்கான், கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியான படம் 'லால் சிங் சத்தா'. இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.12 கோடி. முதல் நாள் மந்தமான வசூலுடனே படத்தின் தொடக்கம் இருந்தது. இதற்கு காரணம் 'பாய்காட் லால் சிங் சத்தா' என்ற சமூக வலைதள பிரசாரம் என கூறப்பட்டது. படம் விமர்சகர்களால் வரவேற்பை பெற்றபோதிலும், சமூக வலைதள பிரசாரம் படத்தின் மீதான எதிர்மறை பிம்பத்தை உருவாக்கியது. இப்போது, 'பாய்காட் விக்ரம் வேதா', 'பாய் காட் பிரம்மாஸ்திரா' என போன்ற முழக்கங்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.

இந்நிலையில் புறக்கணிப்பு பிரசாரத்துக்கு எதிராக பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர் கோபமாக தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார். தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், "புறக்கணிப்பு கோஷங்களுக்கு எதிராக அமைதி காத்து நாங்கள் தவறு செய்கிறோம் என நினைக்கிறேன். பொறுமை, அமைதி எல்லாம் எங்கள் கண்ணியத்தின் வெளிப்பாடு. ஆனால் எங்கள் அமைதியை சிலர் பயன்படுத்திக் கொள்கின்றனர். மேலும் புறக்கணிப்பு பிரச்சாரத்தை ஒரு பழக்கமாகவே மாற்றி வருகின்றனர். உண்மையில் இதுபோன்ற புறக்கணிப்பு கலாச்சாரம் நியாயமற்றது.

அனைவரும் ஒன்று கூடி இதற்கு எதிராக எதாவது செய்ய வேண்டும். சினிமா தொழிலின் பிரகாசம் குறைந்து வருகிறது. மக்களின் பார்வை மாறும் என்று நம்புகிறேன். ஆனால், அதற்கு நாங்கள் அனைவரும் தொழில்ரீதியாக ஒன்றிணைய வேண்டும்" என்று பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE