திரையரங்குகள் ஏன் மூடப்படுகின்றன? - மாதவன் சொல்லும் ‘லாஜிக்’

By செய்திப்பிரிவு

மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுவிட்டதாகவும், கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் திரையரங்குகள் மூடப்படுவதாகவும் நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

'ராக்கெட்ரி தி நம்பி விளைவு' படத்தைத் தொடர்ந்து நடிகர் மாதவன் நடிக்கும் திரைப்படம் 'தோகா: ரவுண்ட் டி கார்னர்'. குக்கி குலாட்டி (Kookie Gulati) இயக்கும் இந்தப் படத்தில் குஷாலிகுமார், தர்ஷன் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் மாதவன், ''நம் நாட்டில் பெரும்பாலான திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன. அதற்கு காரணம் இங்கே நல்ல படங்கள் இல்லை என்பதல்ல. அதன் உள்கட்டமைப்பு மோசமாக இருக்கும் காரணத்தால் தான் திரையரங்குகள் மூடப்படுகின்றன.

திரையரங்குகள் நஷ்டம் அடைவதற்கு காரணம், தற்போது மக்கள் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை விரும்புவதால், பழைய திரையரங்குகளால் அவற்றை வழங்க முடியவில்லை. திரையரங்குகளுக்குச் செல்ல திட்டமிடும் மக்கள் கார் பார்க்கிங்கை விரும்புகின்றனர். ஆனால், திரையரங்குகளில் போதிய கார் பார்க்கிவ் இட வசதி இருப்பதில்லை.

சரியான உள்கட்டமைப்பு வசதியில்லாத காரணத்தால் மக்கள் திரையரங்குகளுக்கு செல்லாத நிலை உருவாகியுள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பதே இதற்கு காரணம். இப்போதெல்லாம் பெரும்பாலானோரிடம் சொந்தப் போக்குவரத்து வாகனங்கள் உள்ளன. இதனால், பேருந்து மற்றும் டாக்சிகளில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது'' என்றார். செய்தியாளர்களிடம், 'மக்கள் திரையரங்குகளுக்கு செல்வதை தவிர்ப்பது படங்களால் அல்ல' என்றும் தெளிவுபடுத்தினார்.

மேலும், ''லால் சிங் சத்தா போன்ற நம்பிக்கைக்குரிய பாலிவுட் படங்களைக்காட்டிலும் தென்னிந்திய படங்கள் திரையரங்குகளில் நன்றாகவே ஓடுகின்றன. அண்மைக் காலமாக சில தென்னிந்திய படங்கள் வடமாநிலங்களில் சிறப்பான வரவேற்பை பெற்றன. ஆனால், இதை வைத்து மட்டும் எந்த முடிவுக்கும் நாம் வந்துவிடமுடியாது. படம் நன்றாக இருந்தால் அதற்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்'' என்றார். அவரிடம் பாய்காட் ட்ரெண்ட் குறித்து கேட்டதற்கு, ''படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணமாக அமைகிறது'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE