‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலினை வைத்து வெளியிட திட்டமா?

By செய்திப்பிரிவு

'பொன்னியின் செல்வம் பாகம் 1' படத்தின் ட்ரெய்லரை முதல்வர் மு.க.ஸ்டாலினை வைத்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். அண்மையில் வெளியான படத்தின் டீசரும், 'பொன்னி நதி பாக்கணுமே' பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் செப்டம்பர் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருவரும் இணைந்து படத்தின் பாடல்களை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல, முதல்வர் மு.க.ஸ்டாலினையும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள படக்குழுவினர் அழைப்புவிடுத்துள்ளனர். அந்த வகையில், அவர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு படத்தின் ட்ரெய்லரை வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

சோழர்களை மையமாக கொண்ட வரலாற்றுப் புனைவு சினிமா என்பதால் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' பட விழாவில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் ட்ரெய்லரை வெளியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE