முத்தையா ஒவ்வொருமுறையும் கண்ணீருடன் தான் கதை சொல்வார் - கார்த்தி

By செய்திப்பிரிவு

''ஒவ்வொரு நாளும் முத்தையா கண்ணில் தண்ணீருடன் தான் கதை சொல்வார். விட்டு கொடுத்துப் போவதில் தான் குடும்பத்தின் அழகே இருக்கிறது'' என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி நடிப்பில் வெளியான 'விருமன்' படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கார்த்தி, ''வெற்றி அடிக்கடி கிடைப்பதில்லை. கிடைக்கும்போது கொண்டாடிவிட வேண்டும். பெரிய குடும்பத்தின் வெற்றி இது.

60 நாள் தேனியில் தங்கியிருந்து உழைத்தோம். ஒவ்வொரு நாளும் முத்தையா கண்ணில் தண்ணீருடன் கதை சொல்வார். விட்டுக் கொடுத்துப் போவதில் தான் குடும்பத்தின் அழகே இருக்கிறது. கூட்டு குடும்பமாக வாழ மிகப்பெரிய சகிப்புத்தன்மை தேவை. நம்மைவிட அவர்கள் முக்கியம் எனக் கருத வேண்டும்.

இந்தப்படம் எங்க குழந்தைகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்று பல பெற்றொர் கூறினர். இந்தப்படம் கிராமத்தில் ஓடும். நகரத்தில் சந்தேகம்தான் என்றார்கள். ஆனால், நகரத்தில் நான் கேட்டே படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை. குடும்பங்களின் தியாகத்தால் தான் நாங்கள் வெளியில் வந்து வேலை செய்ய முடிகிறது'' என்றார்.

சூர்யா பேசுகையில், ''படத்தின் வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் அன்பு கலந்த நன்றி. எங்களுக்கு பின்னாடி இருக்கும் மிகப்பெரிய பலம் எங்கள் வீட்டு பெண்கள் தான். அம்மாவிலிருந்து மனைவியிலிருந்து அவர்களின் தியாகம் மிகப்பெரியது. ஒரு ஆண் இங்கே வெற்றி பெறுவது எளிது.

ஆனால், ஒரு பெண் வெற்றிபெற நிறையவே போராட வேண்டியிருக்கிறது. வீட்டிலிருக்கும் ஆண் மகனை முன்னிறுத்தி அவர்கள் பின்னால் இருக்கிறார்கள். என் தங்கச்சி சொன்னது தான் எனக்கு இப்போது நியாபகம் வருகிறது. 'எங்களுக்கு சொர்க்கம் எதுன்னா, நாங்க சாப்பிட்ட தட்ட இன்னொருத்தங்க கழுவுறது தான்' என்று சொன்னார்கள். பெண்களை ஒவ்வொரு முறையும் முன்னிறுத்தி அவர்களை புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE