50 வருடங்களுக்குப் பிறகு நடிகையிடம் மன்னிப்புக் கேட்ட ஆஸ்கர் - பின்புலம் என்ன?

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்க சினிமாவில் அந்நாட்டுப் பூர்வக் குடிமக்களை மோசமாக சித்தரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘காட் ஃபாதர்’ திரைப்படத்திற்காக அளிக்கப்பட்ட ஆஸ்கர் விருதை பிரபல ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ நிராகரித்தார். அவரது நிராகரிப்பைத் தெரிவிக்க, அமெரிக்க பூர்வகுடியும், நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான சசீன் லிட்டிஃபெதரை தனக்கு பதிலாக 45-வது ஆஸ்கர் நிகழ்வுக்கு மார்லன் பிராண்டோ அனுப்பினார்.

ஆஸ்கர் மேடையில் ‘காட் ஃபாதர்’ திரைப்படத்திற்காக மார்லன் பிராண்டோவுக்கு ஆஸ்கர் அறிவிக்கப்படும்போது, சசீன் லிட்டில்ஃபெதர் அந்த விருது பெறுவதை நிராகரித்து, பிராண்டோ ஏன் இந்த விருதை நிராகரித்தார் என பேசத் தொடங்குவார்.

சசீன் பேசும்போது குறுக்கிட்டு சில நடிகர்கள் கிண்டல் ஓசைகளை எழுப்புவர். எனினும், மனம் தளராது 60 நொடிகள் சசீன் பேசி முடிப்பார்.

முன்னதாக, மார்லன் பிராண்டோ எதற்காக ஆஸ்கர் விருதை நிராகரிக்கிறார் என 8 பக்கம் உரை நிகழ்த்த இருந்தார் சசீன். அவருக்கு ஆஸ்கர் மேடையில் வந்த கைது மிரட்டல்கள் காரணமாக அவர் 60 நொடிகளில் தனது பேச்சை முடித்து, பத்திரிகையாளர் சந்திப்பில் முழு உரையைப் பேசி முடிப்பார். அவரது அந்தப் பேச்சை தொலைக்காட்சியில் நேரடியாக சுமார் 8 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்தனர்.

ஆஸ்கர் மேடையில் சசீனின் பேச்சுக்காக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர் உண்மையாக அமெரிக்க பழங்குடி அல்ல; அவரது சினிமா துறை வாய்ப்புக்காக இவ்வாறு பேசுகிறார். அவர் பிராண்டோவின் காதலி என்று ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.ஆனால், இவை எல்லாவற்றையும் சசீன் தொடர்ந்து மறுத்தார்.

மர்லன் பிராண்டோ

இந்த நிலையில், 1973-ஆம் ஆண்டு நடந்த இந்நிகழ்வுக்கு கிட்டதட்ட 50 வருடங்கள் ஆகவுள்ள நிலையில், ஆஸ்கர் அகாடமி தற்போது மன்னிப்பு கேட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்கர் அகடமியின் முன்னாள் தலைவர் டேவிட் ருபின் கூறும்போது, “அன்று நீங்கள் ஆஸ்கர் மேடையில் அனுபவித்தது தேவையற்றது, நியாயமற்றது. 45-வது அகாடமி நீங்கள் பேசியது மரியாதையின் அவசியத்தையும், மனித கண்ணியத்தின் முக்கியத்துவத்தையும் நமக்கு தொடர்ந்து நினைவூட்டுகிறது” என்றார்.

மன்னிப்பு குறித்து சசீன் கூறும்போது, “அமெரிக்க பழங்குடிகள் மிகவும் பொறுமையானவர்கள். பாருங்கள், இந்த மன்னிப்புக்கு 50 வருடங்கள்தான் ஆகியுள்ளது” என்று கிண்டலாக தெரிவித்திருக்கிறார்.

மன்னிப்புடன் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி, ஆஸ்கர் சார்பாக நடக்கும் சிறப்பு நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராக சசீனை கலந்துகொள்ள ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE