தெலுங்கில் கவனம் செலுத்தும் இயக்குநர் பிரசாந்த் நீல் 

By செய்திப்பிரிவு

'கேஜிஎஃப்', 'கேஜிஎஃப்2' கன்னட படங்களை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல் தற்போது தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.

'கேஜிஎஃப்' சீரிஸ் படங்களின் வெற்றிக்கு பிறகு அதிகம் கவனிக்கப்பட்டவர் இயக்குநர் பிரசாந்த் நீல். அவர் அடுத்ததாக தெலுங்கு நடிகர் பிரபாஸுடன் கைகோத்திருக்கும் திரைப்படம் 'சலார்'. ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் டார்க் சென்ட்ரிக் தீமில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுவருவதால், இந்தத் தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் ஜெகபதி பாபு போன்ற நடிகர்களும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரவி பஸ்ரூர் இசையமைக்கும் இப்படம் பான் இந்தியா முறையில் தயாராகிறது. 'சலார்' வரும் 2023-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் 'என்டிஆர்31' படத்தை இயக்குகிறார் பிரசாந்த் நீல். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதம் தொடங்கும் என அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ''இப்போது, நடிகர் பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கி வருகிறேன். எனது அடுத்த படத்தை ஜூனியர் என்டிஆர் உடன் அடுத்த ஆண்டின் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்குவேன்'' என்றார். இந்தப் படத்தின் கதைக்களம் குறித்து அவர் எதையும் வெளிப்படுத்தவில்லை. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

அடுத்தடுத்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கும் பிரசாந்த் நீல், இந்தப் படங்களுக்குப் பிறகு 'கேஜிஎஃப்' சீரிஸின் அடுத்த பாகத்தை இயக்குவார் எனக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE