சினிமா விமர்சகர், தொகுப்பாளர் கௌசிக் மறைவுக்கு திரையுலகினர் புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

சென்னை: பிரபல தமிழ் சினிமா விமர்சகர் மற்றும் தொகுப்பாளர் கௌசிக் மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தனியார் ஊடகங்களில் பணிபுரிந்துகொண்டிருந்த கௌசிக் சினிமா விமர்சகராகவும், சினிமா டிராக்கராகவும் அறியப்பட்டுவந்தார்.

ட்விட்டர் போன்ற வலைதளங்கள் மூலம் சினிமா தொடர்பான தகவல்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்தார். இதனிடையே, நேற்று மதியம் மாரடைப்பால் உறக்கத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். அவரின் மரணம் ஊடக துறையில் மட்டுமில்லாமல் சினிமாத் துறையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொறியியல் படித்துள்ள கௌசிக் சினிமா மீதான ஆர்வத்தால் அந்தத் துறையில் இருந்து வெளியேறி சினிமா தொடர்பான எம்பிஏ படிப்பை முடித்து பிரபல ஊடகங்களில் பணியாற்றி வந்தார்.

இதனிடையே, நேற்று திரைப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்துள்ளார் கௌசிக். இதற்கான நண்பர்கள் அவரைத் தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால், படுக்கையில் தூக்கத்திலேயே அவர் உயிரிழந்த செய்தி தான் அவர்களுக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் இயக்குநர் மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில், ''கௌசிக் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஆர்வமுடையவராகவும், அறிவாளியாகவும், அனைவரிடமும் அன்பு காட்டக்கூடியவர். வாழ்க்கையின் அர்த்தம் என்ன?! அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் இந்த இழப்பை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் உன்னை மிகப்பெரிய அளவில் மிஸ் செய்வேன்..'' என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''கௌசிக் மறைவு செய்தியை கேட்டு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நம்பவே முடியவில்லை. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்! கௌசிக் இல்லை என்பதை நம்ப முடியவில்லை!'' என பதிவிட்டுள்ளார்.


நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்த சம்பவம் உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினரும், நண்பர்ளும் இதிலிருந்து மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன்.நீ இல்லை என்று நம்ப முடியவில்லை தம்பி'' என பதிவிட்டுள்ளார்.


நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கௌசிக்கை சந்தித்தேன்.குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை அதுல்யா ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், ''கௌசிக் மறைவு செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன். இளமையான மற்றும் மிகவும் கனிவான உள்ளம் கொண்டவர், எப்போதும் நேர்மறையான வார்த்தைகளையே பேசுவார்!அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கடவுள் போதிய பலத்தை கொடுக்கட்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் வெங்கட்பிரபு, ''அடக்கடவுளே! நம்பமுடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு அவரிடம் பேசினேன்!வாழ்க்கை உண்மையில் கணிக்க முடியாதது! கௌசிக்கின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்! சீக்கிரம் போய்விட்டாய் நண்பா'' என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் டி.இமான், ''சகோதரனின் மறைவுச் செய்தியை அறிந்து மனவேதனையடைந்தேன். சினிமாவை நேசித்தவர் சீக்கிரம் போய்விட்டார்'' என்று தெரிவித்துள்ளார்.

தவிர, விக்ரம்பிரபு, சசிகுமார்,அஞ்சலி, வேதிகா, பாலாஜி மோகன் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கௌஷிக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளளனர். நடிகர் சிவகார்த்திகேயன் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE