லால் சிங் சத்தா: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் ராணுவத்தில் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவன் லால் சிங் சத்தா (ஆமிர் கான்).தன்னை சுற்றி நடப்பவைகளை அவனால் தாமதமாகவே புரிந்துகொள்ள முடியும். இந்தபிரச்சினை காரணமாக, அவனை மனநலம் குன்றியவனாகவே அனைவரும் நடத்துகின்றனர். ஆனால், அவனது அம்மா (மோனா சிங்) அவனுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முயல்கிறார். பள்ளித் தோழி ரூபா டிசோசா (கரீனா கபூர்) அளிக்கும் அன்பும், ஊக்கமும் அவனை, தடைகளைக் கடந்து சாதிக்க வைக்கின்றன. இதனால் ரூபாவை விரும்பத் தொடங்குகிறான். ஆனால், நடிகை ஆக விரும்பும் ரூபா விலகிச் செல்கிறாள். ராணுவத்தில் சேர்ந்து, வீரசக்ரா பதக்கம் வென்று,உள்ளாடை உற்பத்தி தொழிலிலும் வெற்றிக்கொடி நாட்டும் லால், ரூபாவை தேடிச் செல்கிறான். அவளை தன் வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொள்ளும் லாலின் விருப்பம் நிறைவேறியதா? ரூபாவுக்கு என்ன ஆனது? லால் வாழ்க்கையில் நடக்கும் அடுத்தகட்ட திருப்பம் என்ன? இக்கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது ‘லால் சிங் சத்தா’ படம்.

ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994-ல் வெளியாகி சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘ஃபாரஸ்ட் கம்ப்’என்னும் ஹாலிவுட் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இந்திய தழுவல் ‘லால் சிங் சத்தா’. மூலக்கதையை அப்படியே வைத்துக்கொண்டு, இந்திய சூழலுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்து திரைக்கதை அமைத்துள்ளார் அதுல் குல்கர்னி. படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார்.

இயல்பானதாக கருதப்படும் சில திறன்களில் பின்தங்கியிருப்போர் மனநலம் பிறழ்ந்தவர்களாக முத்திரை குத்தி ஒதுக்கப்படும் சமூக சூழலில், தன் சிறப்பு திறன்களால் வாழ்வில் வெற்றிபெற்று, சுற்றி இருப்போர் மீது அன்பு செலுத்தும் ‘லால் சிங் சத்தா’ போன்றோரின் கதைகள் கட்டாயம் சொல்லப்பட வேண்டியவை. ஆனால் அதுபோன்ற கதையைச் சொல்வதற்கான திரைக்கதையில் போதுமான அழுத்தமோ, சுவாரஸ்யமோ இல்லை. ரூபா அவரைவிட்டு விலகிச் சென்றுகொண்டே இருப்பதற்கான காரணமும் அழுத்தமாக இல்லை. எனவே இரண்டே முக்கால் மணி நேரத்துக்கு நீளும் படம் பல இடங்களில் பொறுமையை சோதிக்கிறது. அதே நேரம், படம் நெடுக தூவப்பட்டிருக்கும் நெகிழவைக்கும் காட்சிகளும், நடிகர்களின் பங்களிப்பும், இசையும்,உயர்தரமான படமாக்கமும் திரைக்கதை பிரச்சினைகளையும் தாண்டி படத்தை காப்பாற்றிவிடுகின்றன.

நெருக்கடி நிலை, அமிர்தசரஸ் பொற்கோவிலில் நடந்த ராணுவ நடவடிக்கை, இந்திரா காந்தி படுகொலை, ரதயாத்திரை, மண்டல் கமிஷனுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம், பாபர் மசூதி இடிப்பு, அதற்கு பிறகானகலவரங்கள்,கார்கில் போர் என சுதந்திர இந்தியவரலாற்றின் முக்கிய அரசியல் நிகழ்வுகளின்நடுவே லால் சிங்கின் கதை பயணிப்பது, படத்துடன் இந்தியர்கள் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள துணைபுரிகின்றன.கார்கில் போரை மிக விரிவாக காட்சிப்படுத்தும் இடைவேளைக் காட்சி குறிப்பிடத்தக்கது.

கதாபாத்திரத்தில் பொருந்துவதற்காககடுமையாக உழைத்திருக்கிறார் ஆமீர் கான். பல இடங்களில் கள்ளம் கபடமற்ற தன்மையை வெளிப்படுத்தி நெகிழவைக்கிறார். பல படங்களில் பார்த்துவிட்ட ‘பரிதாபத்துக்குரிய நாயகி’ கதாபாத்திரத்துக்கு கரீனா கபூரின் நடிப்பு அழகு சேர்க்கிறது. லால் சிங்கின் ராணுவத் தோழர் பாலுராஜுவாக வரும் சைதன்யா அக்கினேனி, லாலால் உயிர் காப்பாற்றப்பட்டு மனம் திருந்தும் பாகிஸ்தான் தீவிரவாதியாக மானவ் விஜ் சிறப்பாக நடித்துள்ளனர். தனுஜ் டிக்குவின் பின்னணி இசைஉணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு அழுத்தம் சேர்க்கிறது.

இந்தியாவின் பல்வேறு நிலப்பரப்புகளை நேரில்கண்டு ரசித்த உணர்வைத் தருகிறது சேதுவின் அற்புதமான ஒளிப்பதிவு. திரைக்கதையில் சறுக்கினாலும், அன்பும், அப்பாவித்தனமும் நிறைந்தமனிதனின் பயணத்தை காண்பித்து நேர்மறை சிந்தனைகளை விதைத்திருப்பதற்காக ‘லால் சிங் சத்தா’வை மனதார வரவேற்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE