உடல்நல பாதிப்பில் இருந்து மீண்ட சீனிவாசன்... மோகன்லால் முத்தமிட்ட நெகிழ்ச்சிக் காட்சி வைரல்!

By செய்திப்பிரிவு

மலையாள திரையுலகின் ஐகானாக பார்க்கப்படும் பன்முகத்தன்மை கொண்ட இயக்குநர், நடிகர் சீனிவாசனை மோகன்லால் முத்தமிடும் வீடியோ வைரலாகி வருகிறது.

மலையாள சினிமா உலகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவர் சீனிவாசன். இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர். இதுவரை 200-க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். மலையாள சினிமாவின் சிறந்த திரைக்கதை எழுத்தாளரான சீனிவாசன், கேரளாவின் சமூக மற்றும் அரசியல் சூழலை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதையால் அறியப்பட்டவர்.

கேரளாவின் மாநில விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப்பெற்றவர், 1998-ம் ஆண்டு வெளியான 'சிந்தாவிஷ்டாய ஸ்யாமலா' ( Chinthavishtayaya Shyamala) படத்திற்காக தேசிய விருது பெற்றார். இதனிடையே, இதய பிரச்சினை காரணமாக அண்மையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கபட்டிருந்தார்.

இந்நிலையில், நீண்ட நாட்களாக பொதுவெளியில் தலைகாட்டாத சீனிவாசன் அண்மையில் கேரளாவில் நடந்த, 'மழவில் என்டர்டெயின்ட்மென்ட் விருதுகள் 2022' (Mazhavil Entertainment Awards 2022) விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த விழாவில் மேடையேறிய அவரை மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் முத்தமிட்ட நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவைப்பார்ப்பவர்கள், 'இந்த வீடியோ என்னை கலங்க வைத்துவிட்டது' என்றும், 'மலையாள திரையுலகின் வெற்றி காம்போ இது' எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

இதனை மலையாள நடிகர் அர்ஜீ வர்கீஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். நெட்டிசன்கள் சிலர், 'அவரை மெலிந்த உடலுடன் இப்படிப்பார்ப்பது கஷ்டமாக இருக்கிறது' எனவும் பதிவிட்டுள்ளனர்.

மோகன்லாலும், சீனிவாசனும் இணைந்து, 'நாடோடிக்கட்டு' (Nadodikkattu),'மிதுனம்' (Mithunam),'வரவேல்புழு' (Varavelpu), 'சமானசுல்லவர்கு சமாதானம்' (Sanmanassullavarkku Samadhanam), 'சந்திரலேகா' (Chandralekha), 'உதயானானு தரம்' (Udayananu Tharam) உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE