‘விருமன்’ புறக்கணிப்பு விவகாரம்: வருத்தம் தெரிவித்த சினேகன்

By செய்திப்பிரிவு

‘விருமன்’ இசை வெளியீட்டு விழாவில் பாடலாசியர்களுக்கு அழைப்பிதழ் வழங்கவில்லை என பாடலாசிரியர் சினேகன் வேதனை தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் 'விருமன்'. அதிதி சங்கர், சூரி, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அண்மையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் நடைப்பெற்றது. இதில் பாடலாசியர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என தனது வேதனையை சினேகன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னையில் 'விருமன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சினேகன், ''நான் முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு நான் சொன்ன விஷயம் பெரியதாக பேசப்பட்டுவிட்டது. 'மதுரையில் நடந்த விருமன் இசை வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர்களுக்கு அழைப்பிதழ் இல்லாதது வருத்தமாக இருந்தது. ஏனென்றால் 10 படங்களில் நாங்கள் பாடல் எழுதினால், அதில் இரண்டு படங்களுக்கு தான் எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

அப்படியான ஒரு படமாகத்தான் நான் விருமனை நினைத்தேன். அப்படியிருக்கும்போது, அழைப்பிதழ் வராதது, பாடலாசியர்களுக்கான மரியாதை குறைந்துகொண்டே வருகிறதா?' என ஒரு விஷயத்தை பகிர்ந்தேன். அதனால் நான் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் 2டி நிறுவனம் உள்ளிட்டோருக்கு என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

வருத்தம் என்பது அன்பின் மிகுதி தானே தவிர, உங்களை காயப்படுத்தவேண்டும் என சொல்லவில்லை. கார்த்தியின் 'பருத்தி வீரன்' படத்தில் அனைத்து பாடல்களையும் நான் எழுதினேன். சூர்யாவின், 'ஆடாத ஆட்டமெல்லாம்' பாடல் தொடங்கி, 'காட்டுப்பயலே' பாடல் வரை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.

அப்படிப் பார்க்கும்போது ஒரு சில நிறுவனங்களைத்தான் நம்முடைய சகோதரர்களின் நிறுவனமாக கருதுவோம். அப்படி அவர்கள் கண்டுகொள்ளாத போது அன்பின் மிகுதியில் வரும் வருத்தம் தானே தவிர வேறில்லை. மற்றபடி இதனை தவறாக சித்தரிக்க வேண்டாம். ஆனால் அன்றைக்கு என்னை மதுரைக்கு அழைக்கவில்லை என்றாலும் நான் டிவியின் முன் அமர்ந்து எல்லாவற்றையும் பார்த்துகொண்டுதான் இருந்தேன்.

மதுரையில் இருந்த உணர்வை அது கொடுத்தது. என் நண்பர்கள் சிலர், '2டியை எதிர்த்து பேசிட்ட இனி வாய்ப்பு கிடைக்காது' என்றனர். உண்மையை சொன்னால் வாய்ப்பு கிடைக்காது என்றாலும் பரவாயில்லை என்றேன். 2டி குடும்பத்தில் தொடர்ந்து பயணிப்பேன் என நம்புகிறேன்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE