‘லால் சிங் சத்தா’வில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? - நாக சைதன்யா விளக்கம்

By செய்திப்பிரிவு

'லால் சிங் சத்தா' படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதன் காரணம் குறித்து நடிகர் நாக சைதன்யா விளக்கமளித்துள்ளார்.

ஹாலிவுட்டில் உருவான 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தை இந்தியில், 'லால் சிங் சத்தா' என்ற பெயரில் தயாரித்து நடிக்கிறார் நடிகர் அமீர்கான். அத்வைத் சந்தன் இயக்கும் இப்படத்தில் நடிகை கரீனா கபூர் நடிக்கிறார்.

பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்துள்ளார்.

தொடக்கத்தில், நாக சைதன்யா கதாபாத்திரத்தில் தொடக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக அவர் படத்திலிருந்து விலகியதால், நாக சைதன்யா நடித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், அதற்கான காரணம் குறித்து நாக சைதன்யா செய்தித் தளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''நான் அறிந்த வரையில் சில தேதி பிரச்சினையால் விஜய்சேதுபதியால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை என கூறப்பட்டது. தொடர்ந்து அது படத்தை பாதிக்காத வகையில், என்னுடைய கதாபாத்திரம், நான் எங்கிருந்து வந்தேன் என்பதை அடிப்படையாக கொண்டு மாற்றம் செய்யப்பட்டது. ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்குப் பையனாகவும், இயற்கையாகவே இந்தியில் சில தெலுங்கு பேசும் சொற்கள் உள்ளதாலும், இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு மிகவும் வசதியாக இருந்தது'' என்றார்.

மேலும், ''எனக்கு பாலிவுட் படங்கள் எப்போதும் பிடிக்கும். அவர்களின் கன்டென்ட்டை நான் விரும்புகிறேன். அவர்கள் உண்மையில் எல்லைகளை விரிவாக்குகிறார்கள். அவர்களிடம் நிறைய திறமைகள் உள்ளன. ஆமீர்கானைப் போல ஒருவர் வழிநடத்தி என்னை இங்கே கொண்டு வர வேண்டும் என விரும்பினேன். காரணம் எப்போதும் முதல் அபிப்ராயம் மிகவும் முக்கியமானது'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE