புறக்கணிப்புகளை நாம் புறக்கணிக்க வேண்டும்: நெட்டிசன்களுக்கு ஆலியா பட் பதில்

By செய்திப்பிரிவு

சமூக வலைதளங்களில் சில திரைப்படங்களை குறிப்பிட்டு, இவற்றைப் புறக்கணியுங்கள் என்று கூறிவரும் நெட்டிசன்களின் ‘கேன்சல் கலாசாரம்’ என்ற போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'இதுபோன்ற புறக்கணிப்புகளை நாம் புறக்கணிக்க வேண்டும்' என பாலிவுட் நடிகை ஆலியா பட் தெரிவித்துள்ளார்.

ஆமிர்கானின் 'லால் சிங் சத்தா' மற்றும் அக்‌ஷய் குமாரின் 'ரக்‌ஷா பந்தன்' படங்களைத் தொடர்ந்து நெட்டிசன்கள் தற்போது பாலிவுட் நடிகை அலியா பட் நடித்துள்ள 'டார்லிங்ஸ்' படத்தை சமூக ஊடகங்களில் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பதிவுகளை இட்டு வருகின்றனர்.

ஜஸ்மீத் கே.ரீன் இயக்கத்தில், ஆலியா பட் நடித்துள்ள திரைப்படம் 'டார்லிங்க்ஸ்'. ஷேபாலி ஷா, ரோஷன் மேத்யூ மற்றும் விஜய் வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேற்று வெளியானது. இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் அலியா பட்டின் தயாரிப்பு நிறுவனமான எடர்னல் சன்ஷைன் இணைந்து தயாரித்துள்ளது.

படத்தில் கணவரைத் துன்புறுத்தும் காட்சிகளில் ஆலியா பட் நடித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஆலியா பட்டின் 'டார்லிங்க்ஸ்' திரைப்படம் ஆண்களுக்கு எதிராக குடும்ப வன்முறையைத் தூண்டுவதாகவும், அதனைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் ட்விட்டரில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வந்தனர்.

இது தொடர்பாக அலியா படம் அளித்த பேட்டி ஒன்றில், ''நான் தவறு செய்தாலும் பரவாயில்லை. இப்போதெல்லாம் தும்மினாலும், மூச்சுவிட்டாலும், ஏன் காரை விட்டு இறங்கினாலும் நீங்கள் ட்ரால் செய்யப்படுவீர்கள். அதனால் நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதாக இல்லை. அதேபோல நான் செய்யும் தவறுகள் குறித்து கவலைப்படுகிறேனா என்றாலும் அதற்கும் என் பதில் இல்லை என்பதுதான். ஏனென்றால் தவறு செய்யவில்லை என்றால், நான் எப்படி கற்றுக்கொள்வேன் அல்லது நான் எப்படி கேள்வி கேட்பேன்?

நான் தவறாக இருக்கிறேன் என்று சொன்னாலும் அது சரியே. தவறு செய்யாமல் ஒன்றை கற்றுக்கொள்ள முடியும் என்பதை நான் நம்பவில்லை'' என்றார்.

இதுபோன்ற கேன்சல் கலாசாரம் வளர்ந்துகொண்டிருக்கிறதே? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ''கேன்சல் கலாசாரத்தை நாம் கேன்சல் செய்ய வேண்டும். புறக்கணிப்புகளை நாம் புறக்கணிக்க வேண்டும்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE