ஆக்‌ஷன், பஞ்ச்களுக்கு அதிமுக்கியத்துவம் - ’விருமன்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

கார்த்தி நடித்துள்ள 'விருமன்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் 'விருமன்'. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். தவிர, பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரை வட்டாரங்களில் நடைப்பெற்றது.

'கொம்பன்' படத்திற்கு பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து 'விருமன்' படத்தின் மூலம் முத்தையா - கார்த்தி கூட்டணி இணைந்துள்ளனர் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப, அண்மையில் வெளியான இந்தப் படத்தின் "காஞ்ச பூ கண்ணால..." பாடலின் ப்ரோமோ வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. இதில் படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் சங்கர் வெளியிட்டார்.

ட்ரெய்லர் எப்படி?

'நாலு திசைக்கு வெளிச்சம் கொடுக்குற சூரியன் மாதிரிதான்யா நீ இருக்கணும்' என்ற தாயின் வார்த்தைகளுடன் தொடங்குகிறது ட்ரெய்லர். கிராமத்து இளைஞனுக்கே உண்டான உடல்மொழி, காஸ்டியூமுடன் கெத்தாக காட்சியளிக்கிறார் கார்த்தி. படத்தில் பிரகாஷ்ராஜ் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. 'கத்தி பேசுறது கத்தியைக் காட்டி பேசுறது விருமனுக்கு பிடிக்காது', 'என் பிள்ளையா பாசத்த காட்டி அடிச்சிடலாம்.பயமுறுத்தி கிட்ட கூட நெருங்க முடியாது' போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

ஆனால், ட்ரெய்லர் முழுக்க அடிப்பது, தூக்கி வீசுவது என ஒரே சண்டைக்காட்சிகளின் தொகுப்பாகவே இருக்கிறது. மாறாக தொடக்கத்தில் காட்டப்பட்ட தாய் - மகன் காட்சிகள் மீண்டும் ட்ரெய்லரின் ஏதோ ஒரு இடத்தில் சென்டிமென்ட் காட்சிகளாக வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கும், ட்ரெய்லரில் படத்தின் கதை குறித்து யூகிக்கும் காட்சிகள் இல்லாததும் சற்று ஏமாற்றம்தான்.

அப்படியில்லாமல், ஒட்டுமொத்த ட்ரெய்லரை பார்க்கும்போது படம் முழுவதும் சண்டை மற்றும் பஞ்ச் வசனங்களுக்கு அதீத முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது. படம் வரும் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரெய்லர் வீடியோ :

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE