ரோலிங் ஸ்டோன் அட்டைப்படம் டு செஸ் ஒலிம்பியாட் வரையான 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் சர்ச்சைக்கு பாடகி தீ தனது சார்பில் விளக்கம் கொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு எஞ்சாயி எஞ்சாமி சுயாதீன பாடல், இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் தயாரிப்பில் பாடகர்கள் அறிவு, தீ குரலில் வெளியாகியது. சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அப்பாடலை பாடகி தீ பாடி அசத்தியிருந்தார். எனினும் இப்பாடலின் முக்கிய அங்கமான பாடகர் அறிவு அந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. இதுகுறித்து பலரும் அறிவு புறக்கணிப்படுகிறாரா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழும்பியிருந்தனர். இதையடுத்து அறிவு தான் புறக்கணிக்கபடுவது குறித்து இன்ஸ்டா பதிவில் பகிர்ந்திருந்தார். இந்த பதிவு வைரலானது. தொடர்ந்து அறிவின் பதிவுக்கு விளக்கமளிக்கும் வகையில் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இப்போது பாடகி தீ தனது சார்பில் ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில், ரோலிங் ஸ்டோன் இந்தியா அட்டைப்படம் தொடங்கி செஸ் ஒலிம்பியாட் வரை நடந்ததை விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். தனது பதிவில், "எஞ்சாயி எஞ்சாமி பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர்கள் இருவரையும் குறிப்பாக அறிவு குறித்து பெருமையுடனே பேசியுள்ளேன். அவர்கள் இருவரின் முக்கியத்துவத்தை எந்தக் கட்டத்திலும் நான் குறைத்து மதிப்பிட்டது கிடையாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மேடையிலும் இருவரின் பங்களிப்பை முன்னிலைப்படுத்துவதை செய்துவருகிறேன்.
அதேநேரம், எங்களது பணி குறித்து மற்றவர்களால் பகிரப்படும் விளம்பரங்களில் எனக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இயக்குனர் மணிகண்டனும், அவரின் `கடைசி விவசாயி' திரைப்படமும் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் உருவாக்கத்துக்கு பெரிய உந்து சக்தியாக அமைந்தது. 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் வரிகளும், அதன் உருவாக்கமும் எங்களது அணியால் விவாதிக்கப்பட்டே செம்மைப்படுத்தப்பட்டது. பாடல் வெளியாகும் வரை நாங்கள் அனைவரும் ஒரே பக்கத்தில்தான் இருந்தோம்.
» “அடுத்தப் பட அறிவிப்புடன் வருகிறேன்” - சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகிய லோகேஷ்
பாடலுக்கான அர்த்தங்கள் மற்றும் அதன் கதைகள் பெரும்பாலானவற்றை பாடல் வெளியான பின் அறிவின் ஒவ்வொரு இன்டெர்வியூ மூலமாக நான் தெரிந்துகொண்டேன். அறிவு சொன்னது மிகவும் முக்கியமானது மட்டுமல்ல முதன்மையானது என நம்பி, அறிவின் குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என விரும்பினேன். பாடல் மூலம் கிடைத்த அனைத்து வருமானம் மற்றும் உரிமைகளும் எங்கள் மூவருக்கும் சமமாகப் பகிரப்பட்டன. 'எஞ்சாயி எஞ்சாமி' எட்டிய உயரங்களை அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து அனுபவிக்கவே ஆசைப்பட்டேன். ஏதேனும் ஒரு வாய்ப்பு அதில் சமத்துவமின்மையாக இருந்தால் நிச்சயம் அதன் ஒரு பகுதியாக நான் இருக்கமாட்டேன்.
கடந்த ஆண்டு வெளியான ரோலிங் ஸ்டோன் இந்தியா இதழின் அட்டைப்படத்தில் நானும், ஷானும் இடம் பெற்றிருந்தோம். எங்கள் இணைப்பில் (தீ மற்றும் ஷான்) அடுத்து வரவுள்ள ஆல்பத்துக்கான அட்டைப்படமே அது. மற்றபடி, அது எஞ்சாயி எஞ்சாமி பாடலுக்கானதோ அல்லது நீயே ஒலி பாடலுக்கானதோ அல்ல. அந்த அட்டைப் படத்திலும் அந்த பாடல் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. அறிவு, சந்தோஷ் நாராயணன் மற்றும் majja கலைஞர்கள் பற்றிய கட்டுரைகளை ரோலிங்ஸ்டோன் வெளியிட இருக்கிறது என்பது எனக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களின் அட்டைப்படம் வெளியாகும் முன்பே ரோலிங் ஸ்டோன் இதழ் ஒரு ட்வீட்டில் அறிவித்தது. அந்த அறிவிப்பை கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்.
செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் என்னுடன் அறிவையும் பங்கேற்பதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அணுகினர். அறிவு அமெரிக்காவில் இருந்ததன் காரணமாக அவரால் பங்கேற்க முடியாததை அடுத்து அவர் குரலை நிகழ்ச்சியில் பயன்படுத்திக் கொண்டோம். தனது குரலுக்காகவும், பாடலில் அவரின் பங்களிப்புக்காகவும் நிகழ்வில் அறிவு பேசப்பட்டார். 'எஞ்சாயி எஞ்சாமி' பாடலை உருவாக்கியதற்காக சந்தோஷ் நாராயணன், அறிவு, மஜ்ஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவின் ஆதரவிற்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பிரபஞ்சத்தின் மீதும் உயிர்கள் மீதும் கொண்டுள்ள அன்பு, மரியாதையின் பொருட்டால் சக கலைஞர்களால் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் பிறந்தது. என்னைப் பொறுத்தவரை, அது எப்போதும் அப்படியே இருக்கும். உண்மை எப்போதும் வெல்லும்" என்று பாடகி தீ நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago