ஜோதி: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னையில் மருத்துவமனை நடத்தி வருகிறார் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் அஸ்வின் (‘நான்’ சரவணன்). பிரசவத்துக்கு நாள் நெருங்கிவிட்ட நிலையில், நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி அருள்ஜோதியை (ஷீலா) வீட்டில் தனியே விட்டுவிட்டு, பணி நிமித்தமாக பெங்களூரு செல்கிறார். பணி முடிந்து, அவர் மறுநாள் ஊர் திரும்பும்போது, வேறொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் ஜோதி. அது பிரசவத்துக்காக அல்ல,உயிர் பிழைப்பதற்காக!

ஜோதி வீட்டில் இருந்தபோது மயக்க ஊசி போட்டு ‘சிசேரியன்’ செய்து அவரது குழந்தையை திருடிச் சென்றுவிடுகின்றனர். இப்படியும்கூட குழந்தையை திருட முடியுமா என்று அதிர்ந்து நிற்கிறது போலீஸ்.அப்போது ஜோதியின் எதிர் வீட்டில் குடியிருக்கும் காவல் அதிகாரியான சக்தி பாலன் (வெற்றி) இந்த வழக்கில் மறைந்திருக்கும் உண்மையை எப்படி வெளிக்கொண்டு வருகிறார் என்பது கதை.

மருத்துவமனைகளில் இருந்து, குழந்தைகளை திருடி விற்பது, இந்தியாவில் துடைத்தெறிய முடியாத குற்றமாக தொடர்கிறது. அதை கதையின் கருவாக எடுத்துக்கொண்டிருக்கும் இயக்குநர், இவ்வாறு குழந்தைகளை இழந்தவர்களின் வலியை தொட்டுக் கொண்டு,நேர்மையும் விறுவிறுப்பும் கூடிய புலனாய்வு திரைக்கதை மூலம்படத்தை ஒளிரவிட்டுள்ளார். குறிப்பாக, ஜோதியின் தோழியான, குழந்தை இல்லாத தனது மனைவியை காவல் அதிகாரி சக்தி, விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவதை சொல்ல வேண்டும்.

காவல் அதிகாரியாக வரும் வெற்றி தான் படத்தின் நாயகன் என்று நினைத்தால், அந்த இடத்தை ஷீலா எடுத்து கொண்டு போய்விடுகிறார். கண்ணீர் வடிக்க நிறைய வாய்ப்பு இருந்தும் அதை செய்யாமல், ஒரு பெண்ணின் அமைதிக்கு பின்னால் ஆயிரம் விஷயங்கள் ஒளிந்திருக்கும் என்பதை தனது அழுத்தமான நடிப்பால் காட்டிவிடுகிறார் ஷீலா ராஜ்குமார்.

இவர்களுக்கு அடுத்த நிலையில் க்ரிஷா குரூப், குமரவேல், ‘நான்’ சரவணன், ராஜா சேதுபதி, மைம் கோபி என பலருக்கும், கதையை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் அழுத்தமான கதாபாத்திரங்கள். அவர்களும் அதை உணர்ந்து நேர்த்தியாக, பொறுப்புடன் நடித்துள்ளனர்.

முன்னதாகவே உயில் எழுத வேண்டிய அவசியம் ஜோதியின் பெற்றோருக்கு ஏன் ஏற்பட்டது என்பதை திரைக்கதையில் சொல்லத் தவறியது, ஹர்ஷவர்தன் ராமேஸ்வரின் இசையை பயன்படுத்த களம் அமைந்தும் கோட்டைவிட்டது தவிர, ஏவி.கிருஷ்ண பரமாத்மாவின் அறிமுக இயக்கத்தில் பழுதில்லை. ஒரு நெகிழ்ச்சியான கதையில் நம்பகமான திருப்பங்களை வைத்து, குழந்தைகள் கடத்தல் பற்றிய விழிப்புணர்வை தருவதில் வெற்றி பெறும் ஒரு எளிய சுடராக ஒளிர்கிறாள் இந்த ‘ஜோதி’!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE