துப்பாக்கிச் சுடுதலில் 4 தங்கம், 2 வெண்கலம் - தென்னிந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்க நடிகர் அஜித் தகுதி

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் 4 தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களை வென்றார்.

திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்திலுள்ள திருச்சி ரைபிள் கிளப்பில் 47-வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகள் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. பல்வேறு பிரிவுகளாக நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1,300 பேர் பங்கேற்றனர்.

இதில் 25 மீட்டர், 50 மீட்டர் ஆகிய தளங்களில் நடைபெற்ற பிஸ்டல் மற்றும் ரைபிள் பிரிவு போட்டிகளில் நடிகர் அஜித்குமார் கடந்த 27-ம் தேதி பங்கேற்றார். மேலும், அன்று இரவு அவர் திருச்சியில் தங்கி மறுநாள் (ஜூலை .28) 10 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார்.

குவிந்த ரசிகர்கள்

ஆனால், அவரது வருகையை அறிந்து போட்டி நடைபெறும் இடத்தில் ஏராளமான ரசிகர்கள் குவியத் தொடங்கியதால், பிற வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி தனது போட்டியை பாதியிலேயே முடித்துக் கொண்டு 27-ம் தேதி இரவே காரில் சென்னை திரும்பினார்.

இந்நிலையில், அவர் பங்கேற்ற போட்டிகளின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கம், 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கம் என மொத்தம் 4 தங்கப் பதக்கங்களை அஜித் வென்றுள்ளார். இதேபோல 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கலம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கலம் என 2 வெண்கலப் பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார்.

இதன் மூலம் நடிகர் அஜித்குமார், அடுத்ததாக தென்னிந்திய அளவிலான துப்பாக்கிச் சுடும்போட்டிகளில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மாநில அளவிலான போட்டிகள் இன்றுடன் முடிவடைகின்றன. அதைத்தொடர்ந்து இன்று மாலை பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE