‘லைஃப் ஆஃப் எ கிங்’ டு ‘குயின் ஆஃப் கேட்வே’ | சதுரங்கப் பேட்டைப் படங்கள் - ஒரு பார்வை

By செய்திப்பிரிவு

செஸ் விளையாட்டை மையமாக் கொள்ளும் படங்களுக்கு, ஆடுகளம் வழியாக உருவாக்க வேண்டிய காட்சிகளில் துள்ளலையும் துடிப்பையும் ஒரு எல்லையைத் தாண்டி படமாக்குவது பெரும் சவால். சில நிமிடங்களில் மின்னல் வேகத்தில் முடிந்துவிடக் கூடிய ஆட்டங்கள் வந்துவிட்டாலும், விளையாட்டு நிகழும் செஸ் கட்டம் மிகச் சிறியது.

இருவர் மட்டுமே ஆடக்கூடிய ஆட்டத்தின் நகர்வுகளை வியூகத்துடன் மேற்கொள்ள வீரர்கள் எடுக்கும் கால அவகாசம், காட்சிமொழிக்கு பெரும் சவால்! வீரர்களின் நகர்வுகளில் இருக்கும் நிதானத்தை ‘டைம் லேப்ஸ்’ உத்தி மூலம் தொடர்ந்து சமாளிக்க முடியாது. அப்படிச் செய்வதும் செஸ் கட்டத்தையே காட்டிக்கொண்டிருப்பதும் பார்வையாளர்களுக்கு அயர்ச்சியை உண்டு பண்ணக்கூடியவை.

இந்த இக்கட்டைச் சமாளிக்க, செஸ் விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் முதன்மைக் கதாபாத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சித்தரிக்கும்போது திரைக்கதைக்கான ‘நாடகத் தன்மையை’ கொஞ்சம் அதிகப்படுத்த வேண்டியிருக்கிறது.

தவிர, செஸ் விளையாட்டை, மனித வாழ்க்கையின் உருவகமாகப் பார்க்கும் சிந்தனை மரபு, இந்த நாடகமாக்கத்துக்குப் பிடிமானம் தருகிறது. இந்த பின்னணியில் இருந்து செஸ் சினிமாக்களை அணுகுவது, தடங்கலற்ற திரை அனுபவத்தைக் கொடுக்கலாம்.

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் நாடுகளில் உருவாக்கப்பட்ட ‘ஆஃப் பீட்’ செஸ் படங்கள் சுவாரஸ்யம் குன்றாதவை. இந்தக் கட்டுரையில் அறிமுகப்படுத்தப்படும் 5 செஸ் சினிமாக்கள் இறுதியான பட்டியல் அல்ல. உள்ளடக்கம், படமாக்கம், திரை அனுபவம் ஆகியவற்றுடன் செஸ் விளையாட்டுக்குத் திரைக்கதையில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அளவுகோலாகக் கொண்ட, ‘ஆஃப் பீட்’ தெரிவுகளாக இவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

லைஃப் ஆஃப் எ கிங்: ஓர் உண்மைக் கதையின் அடிப்படையில், ‘பயோபிக்’ தன்மையுடன் கடந்த 2014இல் வெளியான அமெரிக்கப் படம் ‘லைஃப் ஆஃப் எ கிங்’ (Life of a King).

இளமையில் செய்த குற்றத்துக்காக இருபதாண்டுகளைச் சிறையில் கழித்துவிட்டு வெளியே வருயே வரும் ஒருவர், சிறையில் தான் கற்றுக்கொண்ட செஸ் நுட்பங்களை, வழி தவறும் மாணவர்களுக்கு அங்கே கற்றுக்கொடுப்பதன் மூலம், வாழ்க்கைக்கான அர்த்தத்தையும் நோக்கத்தையும் அவர்கள் கண்டறிய உதவுகிறார்.

அவர் பயிற்சி அளித்த மாணவர்களில் ஒருவனான தஹிம், அமெரிக்காவின் கிராண்ட்மாஸ்டர் சாம்பியனிடம் கௌரவமாகத் தோல்வியடைந்து பாராட்டுகளைப் பெறுவதுதான் படம். பல தரமான கதைப் படங்களின் எழுத்தாளரும் இயக்குநருமான ஜேக் கோல்ட்பெர்கர் இயக்கிய படம்.

சர்ச்சிங் ஃபார் பாபி ஃபிஷர்: தனக்கு முறையாக செஸ் சொல்லிக் கொடுத்த ஆசிரியருடன் முரண்பட்டு, பின்னர் தனக்கான ஆடுமுறையை, தானே எப்படிக் கண்டறிந்து உலக சாம்பியனாக உயர்ந்தார் என்பது வரையிலான அவரது வாழ்க்கைதான் படம். ஸ்டீவன் ஸேலியன் இயக்கத்தில், ஹாலிவுட்டின் தலை சிறந்த நடிகர்கள் பங்குபெற்று வாழ்ந்த ‘சர்ச்சிங் ஃபார் பாபி ஃபிஷர்’, செஸ் சினிமாக்களின் எந்தப் பட்டியலிலும் தவிர்க்க முடியாத ஒன்று.

தி லூஷின் டிஃபென்ஸ்: காதலையும் செஸ் விளையாட்டையும் இணைத்து, ஒரு காவியம் படைக்க முடியும் என்று காட்டியிருக்கிறார் டச்சு பெண் இயக்குநரான மார்லின் கோரீஸ். அலெக்ஸாண்டர் இவானோவிச் லூஷின் தனக்குச் செஸ் சொல்லிக்கொடுத்த ரஷ்ய ஆசிரியர் லியோ வேலன்டினாவுடன் விளையாட வேண்டிய நெருக்கடி உருவாகிறது. இந்த உக்கிரமான போரில் லூஷின் இழந்தது காதலையா, வெற்றியையா என்பதுதான் படம். 2000இல் வெளியாகி வசூல் சாதனை படைத்தது இந்தச் செஸ் காதல் காவியம்.

டேஞ்சரஸ் மூவ்ஸ்: அகிவா - பாவியஸ் என்பவர்கள் இடையிலான இறுதிப் போட்டியில், இருவருடைய சித்தாந்தங்களும் எவ்வாறு மோதி உடைகின்றன என்பதே பிரெஞ்சு மொழியில் ரிச்சர்ட் டெம்போ எழுதி, இயக்கியிருந்த ‘டேஞ்சரஸ் மூவ்ஸ்’ (Dangerous Moves) திரைப்படம். நகம் கடித்தபடி ரசிக்க வைக்கும் பரபரப்பான இப்படம், சுவிஸ் நாட்டின் சார்பில் ஆஸ்கரில் போட்டியிட்டுச் சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்துக்கான விருதை 1984இல் வென்றது.

குயின் ஆஃப் கேட்வே: ஈ.எஸ்.பி.என். பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றை அடிப்படையாக வைத்து, வில்லியம் வீலர் திரைக்கதை எழுத, வால்ட் டிஸ்னி தயாரிப்பில் கடந்த 2016இல் வெளியான படம் இது. டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் பாருங்கள். உங்கள் கண்கள் எங்கும் நகராதபடி ‘செக்’ வைக்கும்.

> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE