முதல் பார்வை | குலுகுலு - ஒர்க் அவுட் ஆனதா ‘டார்க் காமெடி’?

By கலிலுல்லா

நண்பனை மீட்கச் செல்லும் சந்தானம் தலைமையிலான குழுவின் 'டார்க் காமெடி' வகையறா சம்பவங்களின் தொகுப்புதான் 'குலுகுலு'. உதவி என யாராவது கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு களமிறங்கிவிடும் கூகுள் (சந்தானம்) யாருமில்லாத தனிமையான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார். சமயங்களில் அவர் செய்யும் உதவிகள் அவருக்கே பாதகமாக அமைந்துவிடுகின்றன. இப்படியிருக்கும் சூழலில், கடத்தப்பட்ட தன் நண்பனை மீட்டுத் தரக் கோரி கூகுளிடம் 3 பேர் உதவி கேட்கின்றனர். அவர்களுடன் கைகோத்து நண்பனை மீட்க போராடும் கூகுள் இறுதியில் வெற்றிபெற்றாரா, இல்லையா என்பதை மேலும் சில கிளைக்கதைகளுடன் தொடர்புபடுத்தி சொல்லும்படம் தான் 'குலுகுலு'.

நெற்றியைத் தாண்டி வளர்ந்த முடி, நீண்ட தாடி, அதற்கேற்ற ஆடை, உருவகேலியற்ற, ஆர்பாட்டமில்லாத ஒரு நடிப்பை கொடுத்த விதத்தில் நடிகர் சந்தானத்துக்கு இது முக்கியமான படம். வழக்கத்திலிருந்து மொத்தமாக உருமாறி அழுத்தமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார் சந்தானம்.

படத்தில் அவர் சிரிக்கவில்லை, யாரையும் கலாய்க்கவில்லை ஆனால், பார்வையாளர்களை ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கும் விதத்தில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி இருவரும் படத்திற்கு தேவையான பங்களிப்பை செலுத்தியுள்ளனர். ஜார்ஜ் மர்யான் மற்றும் அவருடன் வரும் 2 பேர் நடிப்பு திரையரங்கையே சிரப்பில் குலுங்க வைக்கிறது. தவிர சாய் தீனா, பிரதீப் ராவத் அழுத்தமான நடிப்பை பதிவு செய்கின்றனர்.

'ஜில் ஜங் ஜக்', 'சூது கவ்வும்', 'டாக்டர்' பாணியிலான தமிழின் அரிய டார்க் காமெடி வகையறா படமாக 'குலுகுலு'வை இயக்கியிருக்கிறார் 'மேயாத மான்' புகழ் ரத்னகுமார். நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒட்டுமொத்த திரையரங்குமே ஆரவாரமாக சிரிப்பதை காண முடிந்தது. இறுதியாக 'டாக்டர்' படத்தில் நிகழ்ந்தது. தமிழ் சினிமாவின் அரிதான முகம் 'டார்க் காமெடி'. கொஞ்சம் பிசகினாலும் அதற்கான பாதையை விட்டு விலகிவிடும்.

அப்படி விலகிவிடாமல் நேர்த்தியாகவே திரைக்கதையை கையாண்டிருக்கிறார் ரத்னகுமார். பெரிய ஆழமான, அழுத்தமான கதையெல்லாம் இல்லாமல், போகிற போக்கில் நடக்கும் சம்பவங்களை கோத்து அதன் வழி சில விஷயங்களை காமெடியாக சொல்லும் விதம் படத்தை கவனிக்க வைக்கிறது.

'எல்லாத்தையும் மூடிட்டு இருந்தாதான் எனக்கு பத்தினி பட்டம் கிடைக்கும்னா எனக்கு அந்தப் பட்டமே வேண்டாம்', 'பசியும் வலியும் புரிஞ்சிக்க எதுக்கு டா மொழி' போன்ற வசனங்கள் அழுத்தமாக கடக்கின்றன. மனிதன் ஆகச்சிறந்த சுயநலவாதி என்பதையும், வயதாகிவிட்ட ஒரே காரணத்துக்காக ஒரு பெண் தன் விருப்பங்களை மறைத்து வாழ வேண்டுமென்ற அவசியமில்லை என்பதையும் போகிற போக்கில் அழுத்தமாகவே படம் பதிவு செய்கிறது. தவிர, இடைவேளைக்கு முன்பு வரும் துப்பாக்கிச்சூடு சண்டைக்காட்சி ரசிக்கும்படியாகவே இருந்தது. இறுதியில் வரும் கேங்க் வார் காட்சிகள் 'லொள்ளு சபா' சேஷூவின் டைமிங் என ஒரு ஜாலியான படமாக உருவாகியிருக்கிறது.

தன் இசையின் மூலம் படத்தை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். படத்தின் இன்னொரு இயக்குநராக காட்சிகளுக்கு காமிக் மியூசிக் மூலம் சுவை சேர்க்கிறார். குறிப்பாக 'மாட்னா காலி', 'அம்மா நாநா' போன்றவை ரசிக்க வைக்கின்றன. இறுதிக்காட்சியில் விஜய் கார்த்தி ஒளிப்பதிவு இருட்டிலும் ஈர்க்கிறது.

படம் ஆங்காங்கே சற்று பொறுமையாக நகர்கிறது. அதற்கு பின்னால் வரும் காட்சிகள் அதை மறக்கடித்து விடுகிறது. க்ளைமாக்க்ஸ் காட்சியின் நீளத்தை கூட இன்னும் சுருக்கியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

மொத்தத்தில் எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் ஜாலியாக திரையரங்குக்கு சென்று சென்று சிரித்து மகிழவும், குறிப்பாக 'டார்க் காமெடி' ரசிகர்களுக்கு ஏற்ற படமாகவும் வெளிவந்துள்ளது 'குலுகுலு'.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE