சினிமாபுரம் - 1 | சின்னத்தாயி - கடவுளையும் கேள்வி கேட்கலாம் என உணர்த்தியவளின் கதை!

By அனிகாப்பா

ஒவ்வொரு தலைமுறைக்கும் அவர்களுடைய இளைய தலைமுறையினர் மீது ஒரு சின்ன பிணக்கு இருந்து கொண்டே இருக்கும். தங்களின் தோள் மீது ஏறி தூரத்து உலகத்தைப் பார்க்கும் இளைய தலைமுறையினர் ஏற்றி வைத்திருக்கும் நம்முடைய வாழ்க்கையை பார்க்க ம(ற)றுக்கின்றனர் என்ற ஆதங்கமே அது. தலைமுறை இடைவெளி என்று இதனை எளிதாக கடந்து விட முடியாது. இந்த இடைவெளிகள் ஆயிரம் ஆயிரம் வரலாற்றுக் கதைகள் தன்னுள் புதைந்து வைத்திருக்கின்றன.

நவீனத்தின் கரம்பிடித்து நடக்கும் 2கே தலைமுறையின் அகராதிகளும் மொழிகளும் புதுமையானவை. மீம்ஸ்கள் ஆதிக்கம் செலுத்தும் அந்தப் புதிய அகாரதிகளில் கிராமம் என்பதற்கு பச்சைப் போர்த்திய வயல்கள் அல்லது பாளம் பாளமாய் வெடித்த பொட்டல் காடுகள் என்றே அர்த்தப்படுத்தி வைத்திருக்கின்றன. உண்மையில் ஒரு கிராமம் என்பது பல்வேறு நுண்ணிய வாழ்வியலை தன்னுள் வைத்திருக்கிறது. அப்படி கிராமங்கள் புதைத்து வைத்திருக்கும் வாழ்க்கையை அபூர்வமாக பதிவு செய்திருக்கும் தமிழ் சினிமாவின் தடம் தேடி பயணிக்கும் முயற்சியே இந்த ‘சினிமாபுரம்’ தொடர்.

தமிழக கிராமங்களின் தனித்தன்மைகளில் ஒன்று அது தன்னுள் மறைத்து வைத்திருக்கும் வேற்றுமையில் ஒற்றுமை. சாதாரண பொழுதுகளில் தெருக்களாக பிரிந்து கிடக்கும் ஊர், கொண்டாட்டங்களின்போது ஒன்றாய்க் கூடிக்கொள்ளும். அப்படி அவர்களை கூடிக் குலவச் செய்வது கோயில் கொடை விழா. வருடத்திற்கு ஒரு முறையோ, குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறையோ நடக்கும் அந்தக் கொடை விழாக்கள் வெறும் கொண்டாட்டங்களை மட்டும் கொண்டு வருவதில்லை. அது சாமனியனுக்கும் சாமிக்கும் இடையில் ஒரு பிணைப்பை உருவாக்கி, அடுத்துவரும் நாட்களுக்கான பெரும் நம்பிக்கையை ஊருக்குள் விதைத்துச் செல்கிறது.

அந்த நம்பிக்கையின் ஒரு துளி, தனது தேவையை சாமியிடம் அதட்டிப் பெறுவது. சாமானியனும் சாமியை அதட்ட முடியும் என்பது தமிழக கிராமக் கொடை விழாக்கள் அடைகாத்து வரும் பொக்கிஷம். சாமானியனும் சாமியை கேள்வி கேட்கலாம் என்பதனை அழகாய் படம் பிடித்துக் காட்டியிருக்கும் படம் 'சின்னத்தாயி'.

தலைமுறை தலைமுறையாக சுடலைமாடனுக்கு சாமியாடும் குடும்பத்தைச் சேர்ந்த சாமி கொண்டாடி வீரமுத்து நாயக்கர். தனது தகுதியையும் மீறி மகன் பொன்னுராசுவை பட்டணத்தில் படிக்க வைக்கிறார். அதே ஊரைச் சேர்ந்த மரக்கரி மூட்டம் போடும் உள்ளூர் செல்வந்தர் சாமுண்டி. சண்டியரான சாமுண்டி, காதலனால் ஏமாற்றப்பட்டு குழந்தையுடன் இருக்கும் ராசம்மா என்ற பெண்ணை கிராமத்திற்கு அழைத்து வந்து உடன் வைத்திருக்கிறார். ராசம்மாவின் மகள் சின்னத்தாயி. பொன்னுராசுவிற்கு சிறுவயது முதலே சின்னத்தாயின் மீது காதல். சின்னத்தாயிக்கும் பொன்னுராசு மீது அன்பு இருந்தாலும் தாயின் கண்டிப்பால் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.

எறும்பு ஊற கல்லும் தேயும் என்ற கதையாக, பொன்னுராசுவின் அன்புத் தொல்லை சின்னத்தாயின் காதலைத் தூண்டி அவனுள் ஒன்று கலக்க வைக்கிறது. இதனால் சின்னத்தாயி தாயைப் போலவே திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாகிறாள். இதைத் தெரிந்துகொள்ளும் ராசம்மா, தன்னைப் போலவே தன் மகளும், வாழ்விழந்து விடக்கூடாது என்று மகளின் கர்ப்பத்திற்கு காரணமான பொன்னுராசுவின் அப்பாவான வீரமுத்துவிடம், அவர் சுடலைமாடனாக சாமியாடி வரும் போது எதிரே சென்று நியாயம் கேட்கிறாள். சாமி பதில் சொல்லாமல் அவளைக் கடந்து கோயிலுக்குச் சென்று நிலைகுலைந்து விடுகிறது. இதற்கிடையில், வயதான ராம்மாவிற்கு பதில் சின்னத்தாயியை ஆசை நாயகியாக மாற்ற நினைக்கும் சாமுண்டியிடமிருந்து மகளைக் காப்பாற்றும் முயற்சியில் ராசம்மா இறந்து விட, ஆதரவற்றவளாகும் சின்னத்தாய், தன் காதலின் மீது நம்பிக்கை வைத்து பட்டணம் போயிருக்கும் பொன்னுராசுவிற்காக காத்திருக்கிறாள். சின்னத்தாயின் காதல் ஜெயித்ததா... ஊரைக்காக்கும் சுடலைமாடன் அவளுக்கு வழி காட்டினாரா என்பதே படத்தின் மீதிக்கதை.

வேட்டைச்சாமியும் கிராமத்து நம்பிக்கையும்

மேலோட்டமாக பார்த்தால் நாயகன்- நாயகி காதல், காதலுக்கு எதிராக வரும் சாதிப் பிரச்சினை, பேருந்து வசதி இல்லாத, வாங்கோண்ணா... சவுக்கியமா... எனப்பேசும் பள்ளிக்கூட வாத்தியார் என 90-களின் கிராமத்து ஃபார்முலா படமாகத் தோன்றினாலும் படத்தின் திரைக்கதை கிராமத்தின் பல நுணுக்கமான விஷயங்களைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது. அதில் முதன்மையானது, கிராமங்களை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் நாட்டார் தெய்வங்களும் அதன் மீது கிராம மக்களுக்கு இருக்கும் உரிமையும் நம்பிக்கையும்.

கொடைக்காக ஊரே கோயிலில் ஒன்று கூடியிருக்கும் போது ஊருக்கு காவலாய், நள்ளிரவுக்கு மேல் கொடை பெறும் சாமி வேட்டைக்குச் செல்வது கொடை விழாவின் ஓர் அங்கம். அப்படி வேட்டைக்குச் செல்லும் சுடலைமாடனுக்கு முன்பாகவோ, எதிராகவோ போகக் கூடாது என்பது நம்பிக்கை. வேட்டைச்சாமிக்கு முன்னால் போகக்கூடாது என்ற கட்டுப்பாடு கோயில் எல்லைக்குள் கடைபிடிக்கப்படுவதில்லை. அங்கு சாமியிடம் தனக்கு வேண்டியதை கேட்டு(ம்)ப் பெறலாம். இந்தப் பண்பாடு படத்தில் ஆரம்பக் காட்சியில் மிக அழகாக பதிவாகியிருக்கும். வேட்டைக்குச் சென்று திரும்பும் போது எதிரே வந்த பெண்ணிடம் உக்கிரம் காட்டிய சுடலைமாடன் கோயிலுக்குள் வந்ததும் அமைதியாக அருள்வாக்குச் சொல்லுவார்.

சின்னச்சின்ன விஷயங்களில் கிராமங்கள்

வீட்டுச் சமையலறை மசாலா குடுவைகளில் அம்மாக்கள் ஒளித்துவைத்திருக்கும் சிறுவாட்டுக்காசு போல, கிராமங்களில் அவசரச் செலவுக்கு கைமாத்துக் கொடுத்து வாங்க ஒரு சிலர் இருப்பர். படத்தில் அப்படியான கைமா(த்து)ற்றுக் கொடுத்து வாங்குபர் சாமுண்டியின் ஆசை நாயகி ராசம்மா. இந்தக் கலாசாரம் வட்டிக்கு கொடுக்கும் தொழிலாக மாறிவிட்டது காலத்தின் பெரும் சோகமே. ராசம்மாவின் அவசரகால உதவியை ஏற்றுக் கொண்ட ஊர், வாழ்க்கை முறையால் அவளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் தாயைப் போலவே அனாதரவாகி சின்னத்தாய் நிற்கும்போது அதே ஊர் கேட்காமலேயே வந்து சின்னத்தாயிக்கு உதவும்.

அதேபோல கிராமங்களில் ஒருவரைப் பார்க்கப்போக வேண்டுமென்றால் விடிகாலையில் போக வேண்டும் அல்லது பொழுது சாய்ந்த பிறகு போக வேண்டும். மற்ற நேரங்களில் கிராமத்தினர் காட்டிற்கு வேலைக்கு சென்றுவிடுவார்கள். ராசம்மாவைக் கொலை செய்த சாமுண்டியை கைது செய்ய வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர், விடிகாலையில் தான் வருவார். அதனை இன்ஸ்பெக்டருக்கும் சாமுண்டிக்கும் நடக்கும் சண்டைக் காட்சி மூலம் காட்டியிருப்பார் இயக்குநர். இவர்களுக்கு சண்டை நடக்கும் போது இடையில் விவசாயி ஒருவர் தன் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பார். தமிழ் சினிமா பதிந்து வைத்திருக்கும் நுணுக்கமான பதிவுகளில் இதுவும் ஒன்று.

படத்தின் தொடக்கக் காட்சியில் சிறுவர்களின் விளையாட்டாய் சாமியாடும் நிகழ்வு ஒன்று வரும். 90களின் சிறுவர்கள் விளையாட்டுக்கள் அவர்களின் வாழ்வியல் சார்ந்தே இருந்தன என்பதை வெளிப்படுத்தும் விதமாய் இருந்த அந்தச் சாமியாடும் பாடல் (கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் பாடல்) இப்படி போகும்...

"அன்னாடம் நாட்டுல வெண்டைக்காய்
சுண்டைக்காய் விலை ஏறி
போகுது மார்க்கெட்ல

விலை ஏறி போகுது மார்க்கெட்ல

என்னாட்டம் ஏழைங்க அத வாங்கி
திங்கதான் துட்டில்ல
சாமி என் பாக்கெட்ல" சிறுவர்களை வைத்து தத்துவம் சொல்லியிருக்கிறார்கள் என்று தோன்றினாலும், கஞ்சிகாச்சி கறிவைச்சு விளையாடிய சிறுவர்களுக்கு காய்கறிவிலையும் தெரிந்தே இருந்தன என்பதை காட்சி வெளிச்சமிட்டிருக்கும்.

கடவுளைக் கேள்வி கேட்டச் சின்னதாய்

சாமானியனும் சாமியிடம் நீதி கேட்க முடியும் என்ற விஷயத்தை படத்தின் இரண்டு இடத்தில் காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குநர் எஸ். கணேசராஜா. முதல்முறை, வேட்டைக்கு வரும் வேட்டைச் சுடலைமாடனாக வரும் வீரமுத்துவிடம் தன் மகளுக்காக ராசம்மா நியாயம் கேட்பது. இரண்டாவது, கன்னிச்சுடலைமாடனாக வேட்டைக்கு வரும் பொன்னுராசுவிடம் தன் மகளுக்காக சின்னத்தாய் நியாகம் கேட்பது. இந்த இரண்டு காட்சிகளிலும் தலைமுறை இடைவெளியை அவ்வளவு அழகாக படமாக்கியிருப்பார் இயக்குநர்.

எல்லாநேரங்களிலும் சுடலைமாடனாக தன்னை முன்னிருத்தும் வீரமுத்து, பொன்னுராசு - சின்னத்தாய் காதலைப் பற்றி ராசம்மா சொன்னதை தன் மனைவியிடம் சொல்லும் போது, "அன்னைக்கு அருளை மீறி ஒரு அழுகை வந்ததது அப்படியே அடக்கிட்டேன் அதனாலதான் கோயிலுக்கு வந்த சாமி சாஞ்சிருச்சு. அது விதி இல்லடி உன் பிள்ள செஞ்ச சதி" எனக் கூறுவார். அந்தக் காட்சியில் ஊரே சாமியாய் பார்க்கும் ஒரு சாமானியானாக மாறியிருப்பார்.

படத்தின் இறுதிக் காட்சியில், தந்தை வழித் தொடர்ச்சியாய் புதிய சுடலைமாடச்சாமியாக மாறியிருப்பான் பொன்னுராசு. கன்னிச்சாமியாக துடியான சுடலையாக வேட்டைக்குச் செல்லும் பொன்னுராசுவின் எதிரே வந்து தன் குழந்தைக்காக நியாயம் கேட்பாள் சின்னத்தாய். எதிரே நிற்கும் பெண்ணின் தந்தை சாமியைப் போல மகன் சாமியையும் ஆட்டிவிடும். ஆனாலும் சுதாரித்துக் கொள்ளும் கன்னிச்சுடலையான பொன்னுராசு, சின்னத்தாயை ஏற்றுக்கொள்ளுவான். முதல் காட்சியில் சாமியை சாமானியனாய் காட்டிய இயக்குநர் இரண்டாவது காட்சியில், கடவுளுக்கு காக்கதான் தெரியும் காவுவாங்கத் தெரியாது என ஒரு சாமானியனை சாமி ஆக்கியிருப்பார்.

புதிய புராணம் சொன்ன இயக்குநர்

இந்தப் படத்தின் மற்றொரு புதுமை, சுடலைமாடன் கதைக்கு இயக்குநர் புதிய மாற்றுக்கதை சொல்லியிருப்பது. கிராமங்களில் சொல்லப்படும் சுடலைமாடன் கதைகளில் மாயாண்டி பெரும்புலையன் என்னும் மந்திரவாதியை அடக்கச்செல்லும் சுடலைமாடன் பெரும்புலையனின் மகள் இசக்கியை வன்புணர்ச்சிக்குள்ளாக்கி அவள் நிறைமாத சூலியாய் இருக்கும்போது அவளை பலி கேட்டுப் பெறுவார் சுடலை எனச் சொல்லப்படும். அந்த புரணக்கதைக்கு, தன் குழந்தையையே பலி கேட்கும் சுடலைமாடன் சாமியாகவே இருக்க முடியாது என்றும் ஊரைக்காக்கும் சுடலைமாடன் அப்படிச் செய்திருக்க மாட்டார் என்றும் சுடலைமாடனை வைத்து சொன்ன கதையில் தான் காதலித்த இசக்கியை கரம்பிடிப்பதாய் புதிய புராணம் எழுதியிருப்பார்.

தொழில்நுட்பப் புரட்சியில் உழலும் இளைய தலைமுறை எப்படி தன் முந்தைய தலைமுறையில் இருந்து மாறுபட்டு இருக்க வேண்டும் என்பதை பண்பாட்டு பின்னணியில் சொல்லியிருக்கும் சின்னத்தாயி ஓர் அசல் கிராமத்து காவியமே!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்