தொடர் வீழ்ச்சியில் பாலிவுட் - எதிர்பார்க்கப்பட்ட ரன்பீர் கபூரின் 'ஷம்ஷேரா' படமும் படுதோல்வி!

By செய்திப்பிரிவு

பாலிவுட் சினிமாவின் தொடர் தோல்விப் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், ரூ.150 கோடியில் உருவான 'ஷம்ஷேரா' திரைப்படம் முதல் வார வசூலில் வெறும் ரூ.40 கோடியை எட்டுவதற்கே தடுமாறி வருகிறது.

பாலிவுட் சினிமா கடந்த சில மாதங்களாகவே தொடர் தோல்விகளால் தத்தளித்து வருகிறது. அந்த தோல்வி அண்மையில் வெளியான ரன்பீர் கபூரின் 'ஷம்ஷேரா' படம் வரை நீண்டுகொண்டிருக்கிறது. ரன்பீர் கபூரை பொறுத்தவரை பாலிவுட்டின் முக்கியமான நாயக முகம் கொண்டவர். அவர் கடைசியாக 2018-ம் ஆண்டு வெளியான சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்திருந்தார்.

அந்தப் படத்திற்கு பிறகு அதாவது 4 ஆண்டுகள் கழித்து 'ஷம்ஷேரா' மூலம் திரைக்கு வந்தார். இரட்டை வேடங்களில், சஞ்சய் தத்துடன் அவர் நடித்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப்பெறும் என எதிர்பார்த்த நிலையில், எல்லாமே தலைகீழாக மாறிப்போனது. நாடு முழுவதும் 4,350 திரையரங்குகளில் பிரமாண்டமாக படம் வெளியானது. கடந்த 22-ம் தேதி வெளியான இப்படம், 5 நாட்களை கடந்த நிலையில், இதுவரை வெறும் ரூ.36 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது.

ரூ.150 கோடி பட்ஜெட்டில் சரி பாதியைக்கூட இன்னும் கடக்கவில்லை. இந்த வார இறுதியில் ரூ.40 கோடியை எட்டலாம் என கணிக்கப்படுகிறது. ஆனால், பல இடங்களில் படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டு, திரையரங்குளிலிருந்து படம் நீக்கப்பட்டுள்ளது.

ரன்பீர் கபூர் நடித்த படங்களிலேயே குறைந்த முதல் நாள் வசூலை பதிவு செய்த படமாக இந்தப் படம் மாறியிருக்கிறது. படம் வெளியான முதல்நாள் வெறும் ரூ.10 கோடியை மட்டுமே வசூலானது பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது அக்சய் குமார் நடிப்பில் வெளியான 'சாம்ராட் பிருத்விராஜ்' படத்தைவிட குறைவான வசூல் என குறிப்பிடப்படுகிறது. 'சாம்ராட் பிருத்விராஜ்' முதல்நாள் 10.70 கோடியை வசூலித்திருந்தது.

இந்த ஆண்டின் அதிக பட்ஜெட்டில் உருவான படங்களில் ஒன்றான 'ஷம்ஷேரா' மோசமான வெற்றியை பதிவு செய்துள்ளது குறித்து பாலிவுட்டைச் சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரபலமான திரைப்பட ஆய்வாளர் சுமன் சின்ஹா கூறுகையில், '' 'ஓல்ட் ஒயின், ஓல்டு பாட்டில்' என்ற பதத்தை குறிப்பிட்டும் அவர், ''ஒரே மாதிரியான பழைய கதைகளை மீண்டும் மீண்டும் பார்வையாளர்கள் எப்படி பார்க்க முடியும்?. பாலிவுட் தற்போது மீட்சிக்கு அப்பால் சென்றுகொண்டிருக்கிறது. காரணம், தற்போதிருக்கும் சூழ்நிலைகளை உள்வாங்க யாரும் தயாராக இல்லை'' என்று தெரிவிதுள்ளார்.

அடுத்து ரன்வீர்கபூரின் 'பிரமாஸ்திரா' 300 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ளது. இந்தப் படம் பாலிவுட்டின் துயரத்தை நீக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE