முதல் பார்வை | ஜோதி - வீரியத்துடன் ஒளிர்ந்ததா, மங்கியதா?

By செய்திப்பிரிவு

பச்சிளம் குழந்தைகள் கடத்தப்பட்டு விற்கப்படுவது குறித்த அழுத்தமான ஒன்லைன் தான் 'ஜோதி'.

வீட்டில் தனியாக இருக்கும் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் சிசு வெளியில் எடுக்கப்பட்டு கடத்தப்படுகிறது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்தs சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டறிய விசாரணையில் இறங்குகிறது காவல் துறை. இறுதியில் யார் அந்த குற்றவாளி, குற்றத்திற்கான பின்னணி என்ன, என்பதை நீண்ட தேடலுக்குப் பிறகு சொல்லும் படம்தான் 'ஜோதி'. நாளை (ஜூலை 28) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

'8 தோட்டாக்கள்', 'ஜீவி' படங்களில் நடித்த வெற்றி இந்தப் படத்தில் குற்றத்தை கண்டுபிடிக்கும் காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். ஆனால் பதற்றத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தும் இடங்களில் தடுமாற்றத்தைக் காண முடிகிறது. க்ளோசப் ஷாட்களில் அவை அப்பட்டமாக தெரிகின்றன. உணர்ச்சிகளை வெளிக்காட்டும் இடங்களில் நடிப்பில் கூடுதல் மெனக்கெடல் தேவை. கான்ஸ்டபிளாக வரும் இளங்கோ குமரவேல் வழக்கமான தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கர்ப்பிணி பெண்ணாக நடித்திருக்கும் ஷீலா ராஜ்குமார், அவருக்கு அப்பாவாக சில காட்சிகளே வந்தாலும் கவனம் பெறும் மைம் கோபி இருவரும் அழுத்தமான நடிப்பை பதிவு செய்துள்ளனர். மற்ற நடிகர்களின் நடிப்பில் போதாமை இருப்பதை உணர முடிகிறது.

பச்சிளம் குழந்தைகள் கடத்தி விற்கப்படுவது குறித்த முக்கியமான ஒன்லைனை எடுத்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா பரமாத்மா. உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு படம் உருவாகியிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். படத்தின் தொடக்கக் காட்சி ஒருவித விறுவிறுப்புடன் தொடங்குகிறது. எந்தவித சமரசமும் இல்லாமல் நேரடியாக கதைக்குள் பயணிக்கும் படம், அடுத்தடுத்த காட்சிகளுக்கான ஆர்வத்தை கொடுக்கிறது.

குற்றவாளி யார் என தொடங்கும் விசாரணையின்போது, படம் கூடுதல் வேகம் எடுக்க வேண்டிய இடங்களில் அழுத்தமில்லாத காட்சிகளால் வேகமும் குறைகிறது. சீரியஸாக செல்லும் படத்தில், 'அணில் சேமியாவா?' என குறிப்பிட்ட நோயை கிண்டல் செய்யும் வசனமும், 'பெண் போலீசோட புருஷனா இருந்தா அடிவாங்கணும்' போன்ற வசனங்கள் காமெடியாக நினைத்து வைத்திருப்பதை ரசிக்க முடியவில்லை.



படத்தில் ஷீலா ராஜ்குமாருக்கான பின்கதை நன்றாகவே இருந்தது. முக்கியமான கதையை தேர்வு செய்த விதத்தில் படக்குழுவினரை பாராட்டலாம். தவிர, அந்த கதையை அழுத்தமான திரைக்கதை மூலம் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், பச்சிளம் குழந்தை கடத்தலின் பின்னணி குறித்து எந்தவித தகவலும் பதிவு செய்யப்படாமல் மேலோட்டமான கதைப்போக்கு கதையின் ஆழத்தை உணரவைக்கத்தவறிவிடுகிறது.

இந்தியாவில் ஆண்டுக்கு 40,000 குழந்தைகள் கடத்தப்படுகின்றனர் என்பதையும், அதில் 11,000 குழந்தைகள் மீட்கப்படுவதில்லை என்ற கணக்கும் படத்தின் இறுதியில் வெறும் எழுத்துகளாக சொல்லப்படுகிறது. இதையொட்டிய தகவல்களை திரைக்கதையாக்கியிருந்தால் படம் இன்னும் கூடுதல் கவனம் பெற்றிருக்கும்.

போலவே, சிறப்புத் தோற்றத்தில் வந்து செல்லும் நடிகரைப்போல, குற்றவாளி கதாபாத்திரத்தை எழுதிய விதம் பார்வையாளர்களுக்கு பிரச்சினையின் வீரியத்தை ஏற்படுத்த தவறிவிடுகிறது. குழந்தையை இழந்த பெற்றோரின் வலி, குழந்தையை பெற்றுக்கொள்ள முடியாத பெண்களின் மனநிலை போன்ற விஷயங்களை பதிவு செய்தது கவனிக்க வைக்கிறது.

ஹர்ஷவர்தன் இசையில், யேசுதாஸ் குரலில் படத்தின் இறுதிக் காட்சியில் வரும் 'யார் செய்த பாவமோ' பாடல் மனதை உருக்கிவிடுகிறது. ஒட்டுமொத்த படத்தின் உணர்ச்சியையும் இந்த ஒற்றைப் பாடலில் கடத்தியிருந்த விதம் ஈர்க்கிறது. கார்த்திக் நேதாவின் வரிகள் பாடலுக்கு பெரும் பலம்.

மொத்தத்தில் அழுத்தமான ஒன்லைனை மேலோட்டமான திரைக்கதையைக் கொண்டு எரிய விட்டதால் ஜோதி சற்று மங்கிய ஒளியிலேயே காட்சியளிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE