ஒருவர் கனவை அடைவதை எதுவும் தடுக்க முடியாது - சூர்யா  

By செய்திப்பிரிவு

ஒருவரின் கனவை அடைவதை எதுவும் தடுக்க முடியாது என்பதை இப்படம் நிரூபித்துள்ளது என 'சூரரைப்போற்று' திரைப்படம் குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

68-வது தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. அதில், அமேசான் டிஜிட்டல் தளத்தில் வெளியான சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு, சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (சூர்யா) மற்றும் சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட அனைத்து மொழிப் பிரிவுகளிலும் ஐந்து விருதுகளை வென்றுள்ளது.

சூர்யா, ஜோதிகா மற்றும் ராஜசேகர் பாண்டியன் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது அமேசான் பிரைம் வீடியோவில் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டது. தேசிய விருது வென்றது குறித்து நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யா பேசுகையில், “சூரரைப் போற்றுக்கு கிடைத்த நம்பமுடியாத மரியாதையால் நான் மிகவும் பணிவன்புடன் இருக்கிறேன்.

கேப்டன் கோபிநாத்தின் இந்த எழுச்சியூட்டும் கதையையும், அவரது பார்வையையும் திரையில் கொண்டு வருவதற்கு எனது நன்றியைத் தெரிவிக்கவும், ஒட்டுமொத்த குழுவின் முயற்சியை உண்மையிலேயே பாராட்டவும் எனக்கு வார்த்தைகள் வரவில்லை. ஒருவரின் கனவை அடைவதை எதுவும் தடுக்க முடியாது என்பதை இப்படம் நிரூபித்துள்ளது.” என்றார்.

விருது பெற்றது குறித்து இயக்குநர் சுதா கொங்கரா கூறுகையில், “சூரரைப் போற்று எங்கள் இதயங்களில் எப்போதும் தனி இடத்தைப் பிடித்துள்ளது. தனது சிறகுகளை விரித்து மக்களுக்காக புதிய உயரங்களை அடைவதில் உண்மையாக நம்பிய ஒரு மனிதனின் ஈர்க்கப்பட்ட கதை இது, மேலும் இந்த மதிப்புமிக்க விருதுக்காக எங்கள் சிறிய திரைப்படத்தை நடுவர் குழுவினர் அங்கீகரித்ததால், ஒட்டுமொத்த அணிக்கும் இது உண்மையிலேயே முக்கியமான நாள்.” என்றார்.

சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்ற மகிழ்ச்சியில் திளைக்கும் நடிகை அபர்ணா பாலமுரளி பேசுகையில், “சுதா மேடம் மற்றும் சூர்யா போன்ற முன்மாதிரியான திறமையாளர்களுடன் இணைந்து படத்தில் பணியாற்றியது தான் எனது வாழ்க்கையை மாற்றியமைத்த பயணம். சூரரைப் போற்றுக்காக தேசிய விருது பெறுவது உண்மையிலேயே ஒரு கவுரவம். இந்த விருது, எனது வரவிருக்கும் படங்களில் இன்னும் கடினமாக உழைக்க வேண்டிய பொறுப்புகளை அளித்திருக்கிறது.” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE