ஓடிடியால் பாதிப்பு - ஆகஸ்ட் 1 முதல் முடங்கும் தெலுங்கு சினிமா படப்பிடிப்புகள் 

By செய்திப்பிரிவு

சினிமா துறையை மறுசீரமைக்க வேண்டி ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் முதல் தெலுங்கு சினிமா படப்பிடிப்புகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

அண்மைக் காலமாக தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. 'ஆர்ஆர்ஆர்', 'புஷ்பா', 'கேஜிஎஃப்' படங்கள் லாபத்தை கொடுத்தாலும், அதையடுத்து வந்த படங்கள் எதுவும் சோபிக்கவில்லை. மக்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துள்ளதாகவும், இதற்கு முக்கியமான காரணம் ஓடிடி தான் எனவும் தயாரிப்பாளர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி 3 வாரங்களில் படம் ஓடிடியில் ரிலீசாகிவிடுவதால் பொதுமக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை என புகார் எழுந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக ஹைதராபாத்தில் பல தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து கூட்டங்களை நடத்தி, துறையை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவாததித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக ஆகஸ்ட் 1 முதல் படப்பிடிப்பை நிறுத்துவது குறித்து தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை திட்டமிட்டு வருவதாக தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிடிஐ நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ''ஆர்ஆர்ஆர்', 'கேஜிஎஃப்2' இதுபோன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களைத் தவிர்த்துவிட்டுப்பார்த்தால், மற்ற படங்களுக்கான திரையரங்கு வருவாய் படுமோசமாக 20 சதவீதத்திற்கு கீழ் குறைந்துள்ளது. ஏற்கெனவே கோவிட் பாதிப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தொழில்துறையை இது கடுமையாக பாதித்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் தொழில்துறையின் நிலைத்தன்மை குறித்து அனைவரும் இப்போது கவலைப்படுகிறார்கள். தற்போது பெரிய நட்சத்திரங்களின் படங்கள் கூட மூன்று வாரங்களுக்குள் ஓடிடியில் வந்துவிடுகின்றன. இது திரையரங்குகளில் வருவாயை குறைப்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

இதுபோன்ற சந்தையில் சிறிய பட்ஜெட் படங்கள் நீடிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. வரும் நாட்களில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி இறுதி முடிவை அறிவிப்போம்'' என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE