சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கைக் கூடாது - ‘ஜெய் பீம்’ பட வழக்கில் ஐகோர்ட் இடைக்கால உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

'ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் எந்தக் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடித்து ஞானவேல் இயக்கிய 'ஜெய் பீம்' படத்தில் வன்னியர் சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறி, தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சந்தோஷ் என்பவரால் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வேளச்சேரி போலீஸார், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரியும் 'ஜெய் பீம்' பட இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், இந்தப் புகாரை தாக்கல் செய்யும் முன்பே படத்தில் காலண்டர் இடம்பெற்றுள்ள சர்ச்சைக் காட்சி நீக்கப்பட்டுள்ளதாகவும், வன்னிய சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரர் தரப்பில் வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த இடையீட்டு மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சூர்யா மற்றும் ஞானவேல் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூலை 21-ம் தேதிக்கு தள்ளிவைத்து, அதுவரை இந்த வழக்கில் சூர்யா உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE