பொன்னியின் செல்வன் டப்பிங் - வெவ்வேறு மொழிகளில் மிரட்டிய விக்ரம்

By செய்திப்பிரிவு

சென்னை: பொன்னியின் செல்வன் (பாகம் 1) திரைப்படத்திற்காக நடிகர் விக்ரம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் தான் நடித்துள்ள கதாப்பாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்து அசத்தியுள்ளார். அந்த வீடியோவை இப்போது பகிர்ந்துள்ளது படக்குழு.

கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வன் படைப்பை அடிப்படையாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் அதே பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளார். வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று இதன் முதல் பாகம் வெளியாக உள்ளது. அண்மையில் இதன் டீசர் வெளியாகி இருந்தது.

விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்போது நடிகர் விக்ரம் இந்த படத்திற்காக பின்னணி பேசிய காட்சிகளின் மேக்கிங் வீடியோவை பகிர்ந்துள்ளது படக்குழு.

விக்ரம் இந்த படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இந்தியா முழுவதும் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. வழக்கமாக பான் இந்தியா திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு ஒவ்வொரு மொழியிலும் வெவ்வேறு நபர்கள் பின்னணி பேசுவார்கள். ஆனால் விக்ரம் இந்த படத்திற்காக செலுத்தியுள்ள அர்பணிப்பின் வெளிப்பாடாக அமைந்துள்ளது இந்த செயல். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளிலும் அவரே டப்பிங் பேசி உள்ளார். அதனை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE