'என்னை விட ஐஸ்வர்யா ராய் அதிக சம்பளம் வாங்கினார்' - ப்ரித்விராஜ்

By செய்திப்பிரிவு

பாலின அடிப்படையில் யாருக்கும் சம்பளம் வழங்கப்படுவதில்லை. மாறாக அவர்களின் நட்சத்திர அந்தஸ்தின் அடிப்படையில் தான் சம்பளம் வழங்கப்படுகிறது என நடிகர் ப்ரித்விராஜ் தெரிவித்துள்ளார்.

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ப்ரித்விராஜ் நடித்த 'கடுவா' திரைப்படம் கடந்த ஜூன் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மாஸ் மசாலா படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தில் மாற்றுத்திறனாளிகளை காயப்படுத்தும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருந்ததற்கு படக்குழு வருத்தம் தெரிவித்தது. அத்தோடு கேரளாவின் திருவனந்தபுரத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் படக்குழு நடத்தியது. இந்த செய்தியாளர் சந்திப்பில் மாற்றுத்திறனாளிகள் விவகாரத்தைத் தாண்டி ஊதிய உயர்வு தொடர்பான பிரச்சினை குறித்தும் பேசப்பட்டது.

அப்போது பேசிய நடிகர் ப்ரித்விராஜ், ''பாலின வேறுபாடின்றி சமமான ஊதியம் வழங்கும் யோசனையை நான் ஆதரிக்கிறேன். ஆனால், ஒரு கலைஞருக்கு அவரது நட்சத்திர மதிப்பின் அடிப்படையில்தான் ஊதியம் வழங்கப்படுகிறதே தவிர, ஒருவரின் பாலினத்தின் அடிப்படையில் அல்ல.

உதாரணமாக ராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராய் என்னைவிட அதிக சம்பளம் வாங்கினார். ஒரு நடிகரின் ஊதியம் என்பது அவர்களின் பாலினத்தின் அடிப்படையில் இல்லாமல், அவர்களின் ஸ்கிரீன் பிரசன்ஸின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. மஞ்சு வாரியர் எதிர்காலத்தில் ஒரு புதுமுக நடிகருடன் நடித்தால், இருவருக்கும் சமமான ஊதியம் வழங்கப்படும் என சொல்ல முடியாது. ஏனென்றால் மஞ்சு வாரியர் அதிக நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகை, அதனால் நிச்சயமாக அவர் புதுமுக நடிகரை விட கூடுதல் ஊதியத்தைதான் பெறுவார்.

ஒரு நடிகரின் ஊதியத்தை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தான் தீர்மானிக்கிறார். ஒருவேளை அந்த நடிகர் கூடுதல் சம்பளத்தை கேட்பவராக இருக்கும்பட்சத்தில், அவரை நீக்கவிட்டு, தான் நிர்ணயித்த சம்பளத்தில் நடிக்கும் நடிகரையே தேர்ந்தேடுக்கிறார்'' என்றார்.

இதற்கிடையில், 'கடுவா' படக்குழு மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், முன்னணி ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று கேரள பிலிம்சேம்பர் சமீபத்தில் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE