‘உங்களுக்கு ரூஸ்ஸோ சகோதரர்களை தெரியுமா?' - அரங்கத்தை சிரிக்க வைத்த தனுஷின் பேச்சு

By செய்திப்பிரிவு

‘தி கிரே மேன்' புரோமோஷன் நிகழ்வில் தனுஷ் பேச்சால் அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.

கேப்டன் அமெரிக்கா பட வரிசையில் இரண்டு படங்கள், அவெஞ்சர்ஸ் பட வரிசையில் இரண்டு படங்களை இயக்கி, ஹாலிவுட்டில் முன்னணி இயக்குநர்களாகத் திகழ்ந்து வரும் இயக்குநர்கள் இணை ஆண்டனி மற்றும் ஜோ ருஸ்ஸோ. ருஸ்ஸோ பிரதர்ஸ் என்று அழைக்கப்படும் இவர்களது இயக்கத்தில் இரண்டு முறை நடிப்புக்காக தேசிய விருது பெற்ற தனுஷ் நடித்து வரும் படம் ‘தி கிரே மேன்'. உலக அளவிலான ஓடிடி தளங்களில் முதலிடத்தில் இருந்து வரும் நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், இம்மாதம் 22ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

இந்தப் படத்தில், தனுஷுடன் ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். பட வெளியீட்டை முன்னிட்டு மும்மையில் நடைபெறும் ‘தி கிரே மேன்’ பிரீமியர் காட்சியில் கலந்துகொண்டு தனுஷுடன் இணைந்து ரசிகர்களை சந்திக்க ருஸ்ஸோ சகோதரர்கள் இந்தியா வருகிறார்கள் என்ற தகவலை நெட்ஃபிளிக்ஸ் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி அமெரிக்காவில் திரையிடப்பட்டது. இதை பார்த்தப் பலரும் தனுஷின் நடிப்பை பாராட்டியிருந்தனர். இதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சக நடிகர்களுடன், தனுஷும் கலந்துகொண்டார். அவரிடம், உங்களுக்கு ரூஸ்ஸோ சகோதரர்களை தெரியுமா, ‘தி கிரே மேன்' படக்குழுவுடன் எப்படி இணைந்தீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தனுஷ், 'இந்த படத்தில் எப்படி நான் இணைந்தேன் என்று எனக்கும் தெரியவில்லை' எனச் சொல்லவும் அரங்கமே சிரித்தது.

சிரிப்பலைக்கு மத்தியில் தொடர்ந்து பேசிய தனுஷ், "இந்தியாவில் உள்ள ஒரு காஸ்டிங் ஏஜென்சி ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக என்னை அணுகினார்கள். அவர்கள் இது பெரிய படம் என்று மட்டும் சொன்னார்கள். எந்தப் படம், என்னப் படம் என அவர்களிடம் நான் கேள்வி எழுப்பியபோது, அதனை சொல்ல உங்கள் அனுமதி வேண்டும் என்று கூறினர்.

பிறகு கிரே மேன் குறித்து அவர்கள் சொன்னதும் எனக்கு இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. உடனே சரி என்று சொல்லிவிட்டேன். உண்மையில் இதுபோன்ற ஒரு வாய்ப்புக்காக நான் காத்திருந்தேன். ஏனென்றால், இன்னும் நிறைய கற்றுக்கொள்வதற்கும், தெரிந்துகொள்வதற்கும் இதுபோன்ற வாய்ப்பை எதிர்நோக்கியிருந்தேன் எனலாம். அதற்கேற்ப இது கிடைத்தது. இதனைவிட பெரிய வாய்ப்பு எனக்கு கிடைக்காது என நினைக்கிறேன்.

கிரே மேன் படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதில் அதிக காட்சிகளில் நான் இல்லை என்றாலும், மிகவும் உற்சாகத்துடன் நடித்தேன்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE