“எனது கனவு நனவாகியிருப்பது சந்தோஷம்” - ‘பொண்ணு’ பட விழாவில் ராம் கோபால் வர்மா

By செய்திப்பிரிவு

பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'லடுக்கி'. கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழில் 'பொண்ணு' என்கிற பெயரில் வெளியாகிறது. மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனை பூஜா பலேகர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, இன்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவினில் பேசிய ராம் கோபால் வர்மா, "இந்தப்படம் எனக்கு மிகவும் சவாலான, மனதிற்கு பிடித்த படம். கல்லூரி நாட்களில் இருந்தே புரூஸ்லி என் இதயத்திற்கு நெருக்கமானவராக இருந்துள்ளார். அவர் படங்களை நான் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறேன். அவரின் படங்கள் போல் இந்தியாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் வந்ததில்லை. நான் இயக்குநராக வந்த பிறகு மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் எடுக்கலாம் என நினைத்தேன். ஆனால் அது தள்ளிப்போனது. இறுதியாக இந்தப்படம் எடுக்க நினைத்த போது புரூஸ்லீயின் உருவம் என் மனதில் வந்து போனது.

அவர் மிக ஒல்லியான உருவம் கொண்டவர். ஆனால் திரையில் அவர் தரும் மேஜிக் அற்புதமானது. அதே நேரம் ஒரு பெண்ணை வைத்து எடுத்தால் என்ன என எனக்கு தோன்றியது. பலரை தேடி கடைசியாக பூஜா பலேகர் குறித்து கேள்விபட்டு சந்தித்தேன். அவரின் திறமைகள் பார்த்து வியந்தேன். அவரின் வீடியோவை மார்ஷியல் ஆர்ட்ஸ் பிறப்பிடமான சீனாவில் உள்ள ஒரு கம்பெனியிடம் காட்டினேன். அவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். பிறகு இந்தப்படத்தை அவர்களுடன் இணைந்து தயாரித்தேன்.

கரோனா காரணங்களால் இந்தப்படம் தாமதமாகிவிட்டது. அனைத்து மொழிகளிலும் இந்தப்படத்தை ஒரே நேரத்தில் அனைத்து மொழியிலும் வெளியிட வேண்டும் என திட்டமிட்டோம். ஹைதராபாத்தில் புரூஸ்லியின் 'எண்டர் தி டிராகன்' திரைப்படம் பார்க்க என்னிடம் பணம் இல்லை. ஆனால் இப்போது என்னுடைய மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் அதே தியேட்டரில் வெளியாகவுள்ளது மகிழ்ச்சி. இது எனது கனவு இப்போது நனவாகியிருப்பது சந்தோஷம்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE