'ராக்கெட்ரி தி நம்பி விளைவு' - 7-வது நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.1.41 கோடி வசூல்

By செய்திப்பிரிவு

'ராக்கெட்ரி தி நம்பி விளைவு' திரைப்படத்தின் 7-வது நாளான நேற்று ஒரு நாள் மட்டும் இந்தியாவில் ரூ.1.41 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: நம்பி விளைவு'. இந்தப் படத்தை நடிகர் மாதவனே நடித்து இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக, 1994-ல் கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் நம்பி நாராயணன் நிரபராதி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் பின்னணியில் உள்ள உண்மையை வெளிப்படுத்தும் கதையாக உருவாகியுள்ள படம், 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' என பெயரிடப்பட்டது. தமிழில் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் மாதவன், நம்பி நாராயணனாக நடித்துள்ளார். சிம்ரன், பிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா, ரான் டொனைச்சே , ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். படம் கடந்த ஜூலை 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படம் வெளியான 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.8.40 கோடி வரை வசூலித்துள்ளது. இந்நிலையில் 7வது நாளான நேற்று ஒருநாள் மட்டும் இந்தியாவில் ரூ.1.41 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. முதல் வாரம் படம் 15 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வாரம் வசூல் எண்ணிக்கை ரூ.25 கோடியை தொடலாம் என கணிக்கப்படுகிறது. குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் வெளியான 'ராக்கெட்ரி தி நம்பி விளைவு' வசூலில் முன்னேறி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE