திரை விமர்சனம் - ராக்கெட்ரி: நம்பி விளைவு 

By செய்திப்பிரிவு

‘நாசா’ வேலையை உதறும் நம்பி நாராயணன், தனது குரு விக்ரம் சாராபாயின் கோரிக்கையால் ‘இஸ்ரோ’வில் சேர்கிறார்.

திரவ எரிபொருள்தான் விண்வெளி எதிர்காலம் என்பதை உணர்ந்து அதற்கான இன்ஜினை கண்டுபிடிக்கும் அவர், கிரையோஜெனிக் இன்ஜினுக்காக அதிகம் செலவிட முடியாத நிலையில், அதை சோவியத் யூனியனில் இருந்து குறைந்த விலைக்கு வாங்க ஒப்பந்தம் செய்கிறார்.

இந்நிலையில், விண்வெளி ஆய்வு ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றார் என தேசத் துரோகக் குற்றச்சாட்டில் அவரை சிறையில் அடைக்கின்றனர்.

அதில் இருந்து சட்டப் போராட்டம் மூலம் எப்படி மீண்டார், அவரது குடும்பமும் அனுபவித்த துன்பங்கள், அவமானங்கள் என்ன என்பதுதான் கதை. நடிகர் சூர்யாவின் நேர்காணல் மூலம் தன் வாழ்வின் கதையை, நம்பி நாராயணன் சொல்வதுபோல தொடங்குகிறது படம்.

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில், புத்தகத்தில் இருக்கும் தவறை பேராசிரியரிடம் சுட்டிக்காட்டுவது, நாசாவே வியக்கும் விஞ்ஞானி வீட்டில், ‘இந்திய கணவனாக’ வேலை செய்தே ஆய்வை முடிப்பது, சோவியத் யூனியனில் இன்ஜின் பாகங்களை கொண்டுவர நடத்தும் சாகசம் என நம்பியின் இளமை எபிசோட் நேர்த்தி என்றால், தேசத்துரோக அவமானம், போலீஸின் மூன்றாம் தர டார்ச்சர், சொந்தபந்த அவமதிப்புகள் என இரண்டாம் பாதி சோகமாகி விடுகிறது.

இக்காட்சிகளில் மாதவனை பார்க்க முடியாமல், நாம் நம்பி நாராயணனையே காண்பதுதான் அவரது உழைப்பின் வெற்றி. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மிரட்டுகிற சிம்ரன், இதில் மாதவன் மனைவியாக கலங்க வைக்கிறார். பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால், அப்துல்கலாம் போன்றோரும் ஆங்காங்கே வந்துபோகின்றனர்.

விக்ரம் சாராபாயாக ரவி ராகவேந்தர், கலாமாக அப்துல்லா கான், சகவிஞ்ஞானிகளாக ஜெகன், சாம் மோகன், இஸ்ரோ தலைவராக மோகன் ராம், கீதாவாக மிஷாஎன அனைவரும் அந்தந்த கதாபாத் திரங்களாகவே மாறியுள்ளனர். நம்பியை நேர்காணல் செய்யும் சூர்யாவிடம், ‘‘என்னை நிரபராதின்னு சொல்லிட்டாங்க.

அப்ப குற்றவாளின்னு ஒருத்தன் இருக்கணுமில்ல, அவன் யாரு?’’ என்கிற அவரது கேள்விக்குத்தான் பதில் இல்லை. இறுதியில் மக்களின் மனசாட்சியாக அவர் முன்பு சூர்யா மண்டியிடுவது உருக்கம்.

சாம் சி.எஸ். பின்னணி இசை, கதை யோடு நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது. இயல்பை மீறாத சிரிஷா ராய் ஒளிப்பதிவு, படத்துக்கு பலம். முதல் பாதி, ராக்கெட் தொழில்நுட்பம் பற்றி விலாவாரியாக பேசுவதால் இயற்பியல் வகுப்பு உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

தேசத் துரோக குற்றத்தை நம்பி நாராயணன் எப்படி போராடி வென்றார் என்பதை விரிவாக, அழுத்தமாக சொல்லியிருந்தால், இந்த ராக்கெட்டின் வேகம் இன்னும் அதி கரித்திருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE