திரை விமர்சனம்: யானை

By செய்திப்பிரிவு

யானைராமேசுவரத்தில் பிவிஆர் - சமுத்திரம் என்ற இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் மோதல்தான் கதை. பிவிஆர் குடும்பத்தில் முதல் மனைவியின் மகன்கள் சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், சஞ்சீவ். இரண்டாவது மனைவி ராதிகாவின் மகன் அருண் விஜய்.

இந்நிலையில் அண்ணன் மகள் காதலனுடன் ஓடிவிட, அதற்கு அருண் விஜய்தான் காரணம் என்று கூறி, மொத்த குடும்பமும் அவரை வீட்டைவிட்டு துரத்துகிறது. மகனோடு அம்மாவும் வெளியேறுகிறார்.

சாதி வெறிகொண்ட அண்ணன்கள் அடுத்து சந்திக்கும் பிரச்சினைகளை, தம்பி அருண் விஜய் எப்படி முறியடிக்கிறார் என்பதையும், பிரிந்த குடும்பம் எப்படி ஒன்றுசேர்கிறது என்பதையும் சென்டிமென்ட் குழைத்து தந்துள்ளனர். வழக்கமாக நெல்லை, தூத்துக்குடி பின்னணியில் கதை சொல்லும் ஹரி, இந்த முறை ராமநாதபுரத்துக்கு மாறினாலும், படத்தில் மாற்றமில்லை.

அதே அரிவாள், சர்ரென சீறும் கார்கள், பெற்றோர் பேச்சை மீறாத காதலி, அம்மா சென்டிமென்ட், குடும்பத்துக்காக எதையும் செய்யும் ஹீரோ என, பார்த்துப் பழகிய அவரது அதே டெம்பிளேட்தான் இதிலும்.

‘தாமிரபரணி’, ‘வேல்’, ‘பூஜை’ படங்களை கொஞ்சம் ஞாபகப்படுத்தினாலும், தொய்வு இல்லாமல் விறுவிறுப்பாக நகர்கிறது படம்.

முறுக்கேறிய உடலுடன் கட்டுக்கடங்காத காளையாக துறுதுறு அருண் விஜய், கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். குடும்பத்தின் மீது காட்டும் பாசம், அண்ணன்கள் வீட்டைவிட்டு வெளியேற்றும்போது கலங்குவது, அண்ணன் மகளை அப்படியொரு கோலத்தில் பார்த்ததும் உருகுவது, காதலியை அடித்துவிட்டு தவிப்பது என அருண் விஜய், ஆஹா விஜய்! பிரியா பவானிசங்கர், அசல் கிராமத்துப் பெண்ணை அப்படியே கண்முன் நிறுத்துகிறார்.

துரோகம் செய்துவிட்டதாக அவமானப்படுத்தும் அருண் விஜய்யிடம், உண்மையை சொல்லும் இடத்தில் கலங்க வைக்கிறார். யோகிபாபு அவ்வப்போது அடிவாங்கி, ரிலாக்ஸ் ஏரியாவை கவனித்துக் கொள்கிறார். சமுத்திரக்கனி எதிர்மறை கதாபாத்திரத்தில் தன்னால் இயன்ற வரை கவனம் ஈர்க்கிறார்.

அப்பா ராஜேஷ், அம்மா ராதிகா, அண்ணி ஐஸ்வர்யா, அண்ணன் போஸ் வெங்கட், மற்றொரு அண்ணன் சஞ்சீவ், அண்ணன் மகள் அம்மு அபிராமி என அனைவரும் கச்சிதம்.

வில்லன்கள் வ.ஐ.ச.ஜெயபாலன், ‘கேஜிஎஃப்’ ராமச் சந்திர ராஜு கவனம் ஈர்க்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையில், ‘உன் நினைப்பு உச்சந்தலைக்குள்ள ஓடுதடா’ பாடல் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. பின்னணி இசை, காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. கோபிநாத்தின் ஒளிப்பதிவு, நீண்ட சிங்கிள் ஷாட் சண்டைக் காட்சி களில் பளிச்சிடுகிறது.

குடும்ப கவுரவம் என்பது சாதி ஆதிக்க வெறியாகி, பெற்ற பிள்ளைகளையே கொல்லத் துடிப்பதை கடுமையாக சாடி, பிளிறுகிறது இந்த ‘யானை’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE