புகழந்தும் மறந்தும் போனாலும் ரகசியப் புன்னகை நல்கும் கார்த்திக் ராஜாவின் இசை!

By குமார் துரைக்கண்ணு

நேர்த்தியான இசைக்கோர்ப்புடன் ஒருங்கமைக்கப்பட்ட மெல்லிசையின் இதமான போக்கே சிறந்த இசை என கூறப்படுகிறது. இதை மிகச் சரியாக உட்கிரகித்து, தெவிட்டாத தேனமுது பாடல்களை தந்தவர்தான் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா. இசை பேரரசரான தந்தையின் மரபுகளையும், இளவரசரான தம்பியின் நவீனத்தையும் ஒருசேர ஒருங்கமைக்கும் திறன் கொண்ட கார்த்திக் ராஜாவின் இசை தெளிந்த நீரோடைப் போல தனித்துவம் பெற்றவை.

தேர்ந்த இசை ஞானமும், செறிவும் கொண்ட கார்த்திக் ராஜாவின் அதீதமான மேற்கத்திய இசைப்பாங்குதான் அவரை மக்களிடம் இன்னும் நெருக்கமாக கொண்டு சேர்க்கவில்லையோ? என்ற சந்தேகம் எல்லோருக்கும் வருவது இயல்புதான். இருந்தாலும், ஒரு இசையமைப்பாளராக அவரது மெலடி பாடல்களைக் கேட்டு ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது.

இசையமைப்பாளர் இளையராஜா வெறுமனே பாடல்களுக்கு மட்டுமின்றி அவரது பின்னணி இசைக்காகவும் பெரிதும் புகழப்படுபவர் என்பது நாம் அறிந்த ஒன்று. இந்த பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளில் 90-களுக்குப் பிறகு இளையராஜாவின் இசையமைப்பில் வெளிவந்த திரைப்படங்களில் கார்த்திக் ராஜா பணியாற்றியிருக்கிறார். அவரது தந்தை இளையராஜாவிடம் தனது சிறுவயது முதலே பல்வேறு படங்களில் வந்த பாடல்களுக்கு கீபோர்ட் இசைத்திருந்த கார்த்திக் ராஜா, பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளை மேற்கொள்ளும் ஒரு நல்ல ஆர்கனைசரும் கூட.

குறிப்பாக 90-களின் பிற்பகுதியில் வெளியான உழைப்பாளி, பொன்னுமணி, தர்மசீலன், சர்க்கரைதேவன், அமைதிப்படை, ராசாமகன், உள்ளிட்ட படங்களுக்கு இசை இளையராஜா என்றாலும், பின்னணி இசையமைத்தவர் கார்த்திக் ராஜாதான். அதோடு மட்டுமின்றி, பாண்டியன், ஆத்மா, கண்மணி உள்ளிட்ட இளையராஜா இசையில் வந்த படங்களில் தலா ஒரு பாடலையும் கார்த்திக் ராஜா கம்போஸ் செய்துள்ளார். அதில் பாண்டியன் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த "பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா" கிளாஸிக் ரகம்.

இப்படியாக தொடர்ந்த அவரது இசைப்பயணத்தில் 1996-ம் ஆண்டு மிக முக்கியமானது. இந்த ஆண்டு வெளியான எனக்கொரு மகன் பிறப்பான், மாணிக்கம், அலெக்சாண்டர் என மூன்று திரைப்படங்களுக்கு இசையமைத்தார் கார்த்திக் ராஜா. இந்த படங்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும், படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக அலெக்சாண்டர் திரைப்படத்தில் வரும் "நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா" என்ற பாடல், அதுவரை விஜயகாந்த் திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களிலிருந்து தனித்துவம் பெற்றதாக அமைந்திருந்தது.

இதன்பின்னர் வெளிவந்த உல்லாசம் திரைப்படம் கார்த்திக் ராஜாவின் இசை வேட்கையைத் தணிக்க சிறந்த களமாக அமைந்திருந்தது. விக்ரம், அஜித் இணைந்து நடித்த இந்தப் படத்தின் பாடல்கள் மனங்களை குளிரச் செய்ததை யாரும் மறுப்பதற்கு இல்லை. அதிலும் "வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா", "யாரோ யார் யாரோ", "கொஞ்சும் மஞ்சள் பூக்கள்" போன்ற பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை. குறிப்பாக "வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா" பாடலில் வரும் வயலின்களுக்கான ஆர்கெஸ்டிரேசனை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

அதே போல் அதன் பின்னர் வந்த நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா திரைப்படங்களிலும் கார்த்திக் ராஜாவின் இசை பலரது பாராட்டையும் பெற்றன. நாம் இருவர் நமக்கு இருவர் படத்தில் வரும் அத்தனை பாடல்களுமே ஹிட் அடித்தன. இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன், ஐலேசா ஐலேசா, கட்டான பொன்னு ரொமான்டிக்கா, ஹலோ மிஸ்டர் காதலா பாடல்களை ரசிகர்கள் கொண்டாடினர். கமல் - பிரபுதேவா காம்பினேஷனில் வந்த காதலா காதலா படத்தில் வந்த மடோனா பாடலா நீ, காசுமேல காசு வந்து பாடல்கள் கார்த்திக் ராஜா பற்றிய பேச்சை பட்டி தொட்டியெங்கும் பரவலாக்கியது.

இதன்பின்னர் சில ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் வெளிவந்த வாஞ்சிநாதன், உள்ளம் கொள்ளை போகுதே, டும் டும் டும் படங்களில், வாஞ்சிநாதன் தவிர இரண்டு படங்களுமே மியூசிக்கல் ஹிட். குறிப்பாக ‘கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா, ரகசியமாய் ரகசியமாய்’ பாடல்கள் மறக்கமுடியாதவை. இதே வரிசையில் வந்த ஆல்பம் படத்தின் செல்லமே செல்லம் என்றாயடி பாடலை 2கே கிட்ஸ்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள்.

இதைத் தொடர்ந்து த்ரீ ரோசஸ், குடைக்குள் மழை, நெறஞ்சமனசு, மனதோடு மழைக்காலம், மெர்குரி பூக்கள், மாமதுரை, முருகா என பல படங்களுக்கு கார்த்திக் ராஜா இசை அமைத்திருந்தாலும் ஆரம்பக் காலத்தில் வந்த பாடல்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததுப் போல அமையவில்லை. இருப்பினும், அச்சமுண்டு அச்சமுண்டு, ரெட்டைச்சுழி போன்ற படங்களில் அவரது பின்னணி பேசப்பட்து. இப்படி ஒரு நேரத்தில் புகழ்ந்தும், சில நேரத்தில் மறந்தும் போனாலும்கூட, கார்த்திக் ராஜாவின் இசை, நமக்குள் ரகசியமாய் ஏற்படும் புன்னகையின் பொருளைப் போன்றதுதான்.

ஜூன் 29 - இன்று - கார்த்திக் ராஜாவின் பிறந்தநாள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE