“ஆஸ்கர் அகடாமி விருது தேர்வுக் குழுவில் இடம்... தம்பி சூர்யாவுக்கு வாழ்த்துகள்” - முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக சேர நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் 2022-ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் நிறுவனத்தில் சேர 397 புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர்களின் பட்டியலில் சூர்யா இடம்பெற்றுள்ளார். ஆஸ்கர் அகாடமி அமைப்பின் உறுப்பினராக சேர சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,

தொழில் ரீதியான தகுதி, அர்ப்பணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகுதிகளை கொண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு உறுப்பினர்களின் அழைப்பாளர்கள் பட்டியலில், ஆஸ்கர் விருது வென்ற 15 பேர் உட்பட ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் 71 பேர் உள்ளனர். ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராகவிருக்கும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை நடிகர் சூர்யா பெற்றுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ''தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கர் அகடாமி விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை!'' என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE