ரஜினி, கமல்... இன்றும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸை ஆளும் நாயகர்கள்!

By கலிலுல்லா

கடந்த 80-களிலும் சரி, 2000-களிலும் சரி, தற்போதைய 2கே கிட்ஸ் தலைமுறையிலும் சரி, கோலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் மாஸ்டர்களாக நடிகர்கள் ரஜனியும், கமலும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அடுத்த தலைமுறை நடிகர்கள் என சொல்லப்படும் எவராலும் அவர்களது ரெக்கார்டை முறியடிக்க முடியவில்லை. அது எப்படி என்பதை விரிவாக பார்ப்போம்.

அஜித், விஜய் படங்கள் வரிசை கட்டுகின்றன. அவர்களுக்கு அடுத்த தலைமுறை நடிகர்களின் படங்களும் முயல்கின்றன. பான் இந்தியா திரைப்படங்கள் மல்லு கட்டுகின்றன. ஆனாலும், அந்த இருவர் கட்டியெழுப்பிய கோட்டையின் கதவுகளை எவராலும் தகர்க்க முடியவில்லை. அவ்வப்போது சிறிய அளவில் விரிசல் விழுகிறதே தவிர அந்த இரும்பு கதவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஏறக்குறைய கடந்த 5 தசாப்தங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் கோலோச்சி வரும் அந்த இரண்டு நாயகர்கள் 'ரஜினி', 'கமல்'. தமிழ் ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் அந்த இருவர் தான் இன்றும் கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸை நிர்ணயித்துக் கொண்டிருக்கிறார்கள். 'இன்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான் ராஜா' என்ற பாட்டு ரஜினிக்கும், 'ஒரு நாயகன் மீண்டும் வரான்' பாடல் கமலுக்கும் இந்த இடத்தில் சரியாக பொருந்தி போகிறது.

2018-ம் ஆண்டு வெளியான ரஜினியின் 2.O உலகம் முழுவதும் ரூ.655 கோடி வரை வசூலித்துள்ளது என்கிறார்கள். கமலின் 'விக்ரம்' ரூ.400 கோடியை எட்டியிருக்கிறது. முந்தைய படங்களின் அனைத்து ரெக்கார்டுகளையும் பொறுமையாக கவனித்து வந்த கமல், 4 வருட ஓய்வுக்குப் பிறகு இறங்கி அடித்திருக்கிறார். '2.O'வும் சரி, 'விக்ரம்' படமும் சரி தற்போதைய நிலையில் கோலிவுட்டின் உச்சபட்ச வசூல் சாதனை படைத்த படங்கள். அதை நிகழ்த்திக் காட்டியவர்கள் தமிழ் சினிமா உலகின் எவர்கிரீன் மாஸ்டர்கள். இது தமிழ் சினிமா ரசிகர்கள் அவர்கள் இருவருக்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை அப்பட்டமாக காட்டுகிறது. இன்று மட்டுமல்ல அன்றைக்குமே கூட தமிழ் சினிமாவின் வசூலில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் ரஜினியும் கமலும்!

1980-ம் ஆண்டு அமிதாபச்சன் நடித்த 'டான்' திரைப்படம் தமிழில் ரஜினி நடிப்பில் 'பில்லா'வாக மறு ஆக்கம் (ரீமேக்) பெற்றது. ரஜினி இரண்டு கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருப்பார். படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த ஆண்டின் அதிக வசூலை குவித்த படமாக உருப்பெற்றது 'பில்லா'. அந்தப் படம் வெளியாகி இரண்டாண்டுகள் கழித்து 1982-ம் ஆண்டு கமலின் 'சகலகலா வல்லவன்' திரைப்படம் வெளியானது.

கமலுக்கு அந்தப் படம் பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தது. அந்த ஆண்டின் அதிக வசூலைக் குவித்த படத்தில் முதலிடம் பிடித்தது. அதன் பிறகு பலமுறை இப்படி நடத்திருக்கிறது. காலச்சக்கரம் வேகமாக சுழல, அதில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட நடிகர்களின் வருகை நிகழ்ந்தது. ரஜினி, கமல் படங்கள் சற்று ஓய்வெடுத்தன. 'சற்று' என்பது கவனிக்க வேண்டியது.

சொல்லப்போனால் இந்த அடுத்த தலைமுறை நடிகர்களில் குறிப்பாக, அஜித், விஜய் உச்சத்தில் இருந்த சமயம் அது. அப்போது, கமலும், ரஜினியும் மீண்டும் 'சரி அந்த பசங்களுக்கு கொடுத்த டைம் போதும்' என மீண்டும் களத்தில் இறங்கினர். 2005-ம் ஆண்டுக்கு பிறகு ரஜினி 'சந்திரமுகி'-யை கொடுத்து பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தி மிரட்டினார். நானும் வரேன் என கைகோர்த்த கமல், 'வேட்டையாடு விளையாடு' மூலம் பாக்ஸ் ஆபிஸை தூசு தட்டினார்.

தொடர்ந்து 'தசாவதாரம்', 'விஸ்வரூபம்' என கமல் இறங்கி அடிக்க, ரஜினி, 'சிவாஜி', 'எந்திரன்' தெறிக்கவிட்டார். 80 களிலும் சரி, 2000களிலும் பாக்ஸ் ஆபிஸிலில் இருவரின் படங்களும் இடம்பிடித்துடன் முதலிடத்தில் இருந்தன. இங்கே சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் 2000க்கு பிறகு, அடுத்த தலைமுறை நடிகர்களின் படங்களே மோசமான வசூலை தான் கொடுத்தன. அத்தகைய சூழலில் தான் சந்திரமுகியும், வேட்டையாடு விளையாடும் தமிழ் சினிமா கலெக் ஷனில் வேட்டையாடின.

இப்போதைய சூழலை எடுத்துக் கொண்டாலும் நடிகர்கள் விஜயும், அஜித்தும் பக்காவான மாஸ் நடிகர்களாக வலம் வருகின்றனர். இந்த சமயத்தில் அஜித்தின் 'வலிமை' யாலும், விஜய்யின் 'பீஸ்ட்' படத்தாலுமே கூட ரஜினியின் முந்தைய ரெக்கார்டுக்கோ, கமலின் தற்போதைய ரெக்ராட்டுக்கோ டஃப் கொடுக்க முடியவில்லை. சரி.. மூத்த நடிகர்கள் என சொல்லி சமாதானம் செய்தாலும், அப்படியே தெலுங்கு திரையுலகுக்கு சென்று வருவோம்.

சிரஞ்சீவி, நாகார்ஜுனா மற்றும் வெங்கடேஷ் தெலுங்கு திரையுலகின் சீனியர்கள். ஒரு காலத்தில் திரையை தெறிக்க விட்டவர்கள். ஆனால் இப்போது? பிரபாஸும், அல்லு அர்ஜுனும், ராம்சரணும், ஜூனியர் என்டிஆரும் தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்களைத் தாண்டி மூத்த நடிகர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

அப்படியே பாலிவுட் பக்கம் ஒதுங்கினால் இன்னும் மோசம். 30 ஆண்டுகள் சீனியரான ஷாருக்கானின் கடைசி வெற்றி படத்தை தேடி எடுக்க சில யுகங்கள் தேவைப்படலாம். அவருக்கு மட்டுமல்ல, சல்மான் கான், அக்ஷய் குமார், ஹ்ரித்திக்குக்கும் கூட. அமீர்கான், தங்கலுக்கு பிறகு பெரிய வெற்றியை பார்க்க முடியவில்லை.

ஒரு காலத்தில் 'கான்' களின் ஆதிக்கமாக இருந்த பாலிவுட் இளைய தலைமுறை வசமாகிவிட்டது. அப்படிப் பார்க்கும்போது, தமிழ் சினிமாவில் ரஜினியும், கமலும் இன்னும் ஓயவில்லை. சொல்லப்போனால், கமலின் 'விக்ரம்' தீபாவளி, பொங்கல் போன்ற எந்த விழா நாட்களிலும் கூட ரிலீசாகவில்லை. அப்படியாகிருந்தால் கூடுதல் வசூலை வாரியிருக்கும்.

தமிழ் சினிமாவில் எத்தனை நடிகர்கள் வந்தாலும் ரஜினி, கமல் இணைந்து கட்டமைத்த கோட்டையை தகர்ப்பது கடினமே!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE