உறுதுணை நடிகரும் நாடகக் கலைஞருமான ‘பூ’ ராமு மறைவு

By செய்திப்பிரிவு

நாடகக் கலைஞரும், திரைப்பட உறுதுணை நடிகருமான ‘பூ’ ராமு திங்கள்கிழமை மாரடைப்பால் காலமானார்.

இயக்குநர் சசி இயக்கிய ‘பூ’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர், நாடகக் கலைஞர் ராமு. அந்தப் படத்தில் அவர் நடித்திருந்த ‘பேனாக்காரன்’ கதாபாத்திரம் அவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்ததால், அதன் பின்னர் ‘பூ’ ராமு என்று அறியப்பட்டார். அதனைத் தொடர்ந்து. ‘நீர்ப்பறவை’, ‘தங்கமீன்கள்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ உள்ளிட்ட பல படங்களில் உறுதுணை நடிகராக ‘பூ’ ராமு நடித்துள்ளார்.

இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக திங்கள்கிழமை காலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிக்கிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ராமு குறித்து நடிகர் காளிவெங்கட் தனது ட்விட்டர் பக்கத்தில், "வீதி நாடகக் கலைஞர் திரைப்பட நடிகர் தோழர் 'பூ' ராமு மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் கிரிட்டிகல் நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் Tower 1-ல் முதல் மாடி ICU Ward 111ல் Bed 15-ல் சிகிச்சை பெற்று வருகிறார்" என்று பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டிவந்த நிலையில் திங்கள்கிழமை மாலையில் சிகிச்சைப் பலனின்றி ‘பூ’ ராமு காலமானார்.

நடிகர் பூ ராமுவின் உடல் ஊரப்பாக்கம், பெரியார் நகரில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டு செல்லப்படவுள்ளது. பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு நாளை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், சென்னை கலைக்குழு போன்றவற்றில் சிறப்பான பங்களிப்பை அளித்து மக்கள் கலைஞராக விளங்கியவர் ராமு.

பின்புலம்: 2008-ம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளியான ‘பூ’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் ‘நீர்ப்பறவை’, ‘தங்க மீன்கள்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘பேரன்பு’, ‘கர்ணன்’, ‘நெடுநால் வாடை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து சினிமா ஆர்வலர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். வீதி நாடகக் கலைஞர், திரைப்பட நடிகர் என பன்முகங்களைக் கொண்டவர்.

பள்ளியில் சில அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்துக்காகப் போராடத் தொடங்கி, பிறகு பொதுவுடமை இயக்கத்தின் மாணவர் அமைப்பில் சேர்ந்து, தொடர்ந்து அவர்களின் கலைக்குழுவில் இணைந்து நடிக்கத் தொடங்கினார். பிறகு ஒருங்கிணைப்பாளராக நீண்ட நாள்கள் இருந்தவர். மூன்று வீதி நாடகங்களை எழுதி இயக்கியவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE