திரை விமர்சனம்: மாயோன்

By செய்திப்பிரிவு

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று நம்பப்படும் பிரம்மாண்ட கிருஷ்ணர் கோயில் ஒன்று மாயோன் மலை எனும் ஊரில் பிரசித்திபெற்று விளங்குகிறது. அக்கோயில் கருவறையில் புதையல் இருப்பதாக ஓலைச்சுவடி மூலம் அறிந்து, அதை எடுத்து வெளிநாட்டுக்கு விற்க திட்டமிடுகிறார் தொல்லியல் அதிகாரி தேவராஜ் (ஹரீஷ் பெரடி). அதே துறையின் இளம் அதிகாரியான அர்ஜுன் (சிபிராஜ்), அவரது திட்டத்துக்கு கைகொடுக்க தன் நண்பர்கள் குழுவுடன் முன்வருகிறார். ஆனால், அந்நிய படையெடுப்பாளர்கள் புதையலை அபகரிக்காமல் இருக்க, முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் தடைகள், அமானுஷ்யங்களை கடந்து அந்த குழுவால் புதையலை எடுக்க முடிந்ததா என்பது மீதி கதை.

அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்துள்ள படத்தைகிஷோர் இயக்கியுள்ளார். அமானுஷ்யம் கலந்த ஆன்மிகம், அறிவியல் எனஇரண்டுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கதைக் களத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் காரணம் ஆன்மிகமா, அறிவியலா என்பதை, புத்திசாலித்தனமாக பார்வையாளரின் முடிவுக்கே விட்டுவிடுகின்றனர்.

பூச்சிபோல தோற்றமளிக்கும் ட்ரோன் ஒன்றை வைத்து கர்ப்பக்கிரகத்தில் உள்ளகல்வெட்டு எழுத்துகளை தெரிந்துகொள்ளும் காட்சியில் தொடங்கி நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறது படம்.

கோயில்களில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் அரிய செல்வங்களை பாதுகாப்பதற்காக, அவை தொடர்பான பல தொன்மங்களை உருவாக்கி வைத்திருக்கும் பண்டைய தமிழர்களின் அறிவுசரியாக உணர்த்தப்படுவது பாராட்டத்தக்க விறுவிறுப்பான அம்சம்.

நாயகனை முன்னிட்டு இறுதியில்நிகழும் திருப்பம் (ட்விஸ்ட்) நம்பகத்தன்மையுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளது.சில இடங்களில் கிராஃபிக்ஸ் என அப்பட்டமாக தெரிந்தாலும், ஒட்டுமொத்த காட்சி அனுபவமாக பார்வையாளரை கவரவே செய்கிறது.

சிபிராஜ், கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். தான்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிகுமார், ராதாரவிஉள்ளிட்டோர் கொடுத்த வேலையை சரியாக செய்கின்றனர். நாயகனின் அறிவியல்பூர்வ அறிவு வெளிப்படும் காட்சிகளில் நவீனமாகவும், அமானுஷ்யக் காட்சிகளில் உருக்கமாகவும் ஒலிக்கும் இளையராஜாவின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம்.

ஒரு புதையல் வேட்டை கதையில், அறிவியல், ஆன்மிகம், அமானுஷ்யம் ஆகியவற்றை சேர்த்து கலவையான பொழுதுபோக்கு படமாக கொடுக்க முயன்றுள்ளனர் எழுத்தாளரும், இயக்குநரும். அந்த வகையில், புதையல் வேட்டையில் பல நம்பகமான திருப்பங்களை சேர்த்திருந்தால், மேலும் சுவாரஸ்யமாக இருந்திருப்பான் இந்த ‘மாயோன்’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE