முதல் பார்வை | வேழம் - தேடித் தரப்பட்டதா ‘த்ரில்’ அனுபவம்?

By செய்திப்பிரிவு

தன் காதலியை கொன்றவர்களை தேடிப் பழிவாங்கும் ஒரு காதலனின் போராட்டம்தான் 'வேழம்' படத்தின் ஒன்லைன்.

காதலர்களான அசோக் செல்வனும், ஐஸ்வர்யா மேனனும் ஊட்டியின் காட்டுப்பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருக்கின்றன. அப்போது, கொலைகாரர்கள் சிலர் ஐஸ்வர்யா மேனனைக் கடத்திச் சென்று கொலை செய்துவிடுகின்றனர். அசோக் செல்வன் மீட்கப்படுகிறார்.

காலங்கள் கடந்தாலும், ஐஸ்வர்யா மேனனின் பிரிவால் வாடும் அசோக் செல்வன் எப்படியாவது கொலைகாரர்களை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என வெறிகொண்டு தேடி அலைகிறார். இறுதியில் அவர் கொலைகாரர்களை கண்டுபிடித்தாரா? இந்தக் கொலையை யார், எதற்காக செய்தார்கள் என பல கேள்விகளுக்கு பல திருப்பங்களுடன் விடை சொல்கிறது 'வேழம்' படத்தின் திரைக்கதை.

தடிமன்னான தாடியின் மூலம் 5 ஆண்டுகளுக்கு முன், பின்னுக்கான வித்தியாசங்களை காட்டியிருக்கிறார் அசோக் செல்வன். காலத்தை கடக்க தாடி ஒரு பெரும் உதவிகரமாக மாறியிருக்கிறது (?!). எப்போதும் இழப்பின் வலியுடன், ஒருவித மென்சோகத்தை சுமந்துகொண்டு துருத்தல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருகிறார் அசோக் செல்வன்.

ஐஸ்வர்யா மேனன் மற்றும் ஜனனி இருவருமே கலையாத மேக்கப்பில் வந்து செல்கின்றனர். அழுகையாலும், எதிரிகளின் தாக்குதலாலும் ஐஸ்வர்யாவின் மேக்கப் அவ்வப்போது சற்று கலைகிறது. தவிர்த்து இருவருக்கும் நடிப்புக்கான பெரிய தேவை எழவில்லை. மற்ற நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை அறிந்து தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சந்தீப் ஷியாம் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த வாரம் வெளியான படங்களில் த்ரில்லர் பாணியில் இது இரண்டாவது படம். த்ரில்லர் படங்களின் மீதான இயக்குநர்களின் ஆர்வத்தை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. அதற்காக இப்படியா?

படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக தொடங்க, 5 ஆண்டுகளுக்குப் பிறகு என்ற வாசகத்துடன் விறுவிறுப்புக்கு என்ட் கார்ட் போடப்படுகிறது. அதன்பிறகு பெரிய அளவில் சுவாரஸ்யமில்லாமல் காதல் காட்சி, ஃப்ளாஷ் பேக் என நகர்கிறது. தேவையற்ற பாடல்கள் சோதிக்கின்றன.

குறிப்பாக இன்ஸ்டன்ட் காஃபியைப் போல, ஜனனிக்கு அசோக் செல்வன் மீது இன்ஸ்டன்ட் காதல் எப்படி வருகிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. காதலிக்கப்பதற்காக மட்டுமே ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க முடியுமென்றால், அது ஜனனியாகத்தான் இருக்க முடியும். பலவீனமான கதாபாத்திர வடிவமைப்பால் ஐஸ்வர்யா மேனனை இழந்து வாடும் அசோக் செல்வன் அலறும் காட்சிகள் நமக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக, மற்றொரு கதாபாத்திரத்தின் கொலை நம்மை உலுக்குகிறது.

இரண்டாம் பாதி கொஞ்சம் கொஞ்சமாக திரைக்கதை வேகமெடுக்கிறது. குற்றவாளிகள் சிக்கியதும், ஏன் கொன்றார்கள் என அறிவதற்கான ஆர்வம் மேலேழுகிறது. டாப் கியரில் இருக்கும் ஆர்வத்தை படிப்படியாக பலவீனமான திரைக்கதையே குறைத்துவிடுகிறது. குற்றவாளிக்கான முடிச்சுகளை அவிழ்க்கும் விதம் தொடக்கத்தில் ஓகே என்றாலும், போக போக ட்விஸ்ட்டுக்காக கதையை எழுதிய காரணத்தாலும், பல எதிர்மறை கதாபாத்திரங்களை கொண்டுவந்ததாலும் அசோக் செல்வனைப்போல பழிவாங்கியதற்கான திருப்தி நமக்கும் இறுதிவரை ஏற்படவில்லை.

சந்தீப் ஷியாம் முன்வைக்கும் உலகத்தில் பெரும்பாலும் மனிதர்கள் மோசமானவர்கள். சுயநலத்திற்காகவும், தன் தேவைகளுக்காகவும் மற்றவர்களை அழிக்க நினைப்பவர்களாக இருக்கிறார்கள். இதையெல்லாம் தவிர்த்துவிட்டு, இறுதியில் வரும் ஒரு காட்சி படத்தை வேறொரு தளத்தில் நிறுத்துகிறது. அந்தக் காட்சியில்தான் அத்தனை அடர்த்தி.

தவிர, நீலகிரியின் அந்த சீதோஷ்ணநிலையை திரையரங்குக்குள் கொண்டு வந்து கண்களுக்கு குளிர்ச்சியூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சக்தி அரவிந்த். குறிப்பிட்ட உணர்ச்சிகளுக்கு தகுந்தாற்போல வைக்கப்பட்ட ப்ரேம்கள் படத்திற்கு பலம். ஜானு சாந்தர் பின்னணி இசை பெரிதாக கவரவில்லை. படத்தொகுப்பில் கூடுதல் கவனம் செலுத்தி தேவையற்ற காட்சிகளை குறைத்திருக்கலாம்.

மொத்தத்தில் 'வேழம்' திரைப்படம் ட்விஸ்ட் வைக்க வேண்டும் என தீர்க்கமான முடிவெடுத்தபின்பு கதையை எழுத தொடங்கிய படைப்பாக மாறியதால், அழுத்தமான த்ரில்லர் திரைக்கதையிலிருந்து சற்றே நழுவியிருக்கிறது.

வீடியோ வடிவில் விமர்சனத்தைக் காண :

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE