முதல் பார்வை | மாயோன் - அழுத்தம் குறைந்த அறிவியல் + ஆன்மிக கதைக்களம்

By கலிலுல்லா

அறிவியலின் உதவியால் கோயிலுக்குள் நுழைந்து புதையலைத் தேடும் பயணம் தான் 'மாயோன்' படத்தின் ஒன்லைன்.

புதுக்கோட்டைக்கு அருகே உள்ள புராதன கோயில் ஒன்றில் புதையல் இருப்பதை ஓலைச்சுவடிகள் மூலம் தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கண்டறிகிறார். ஏற்கெனவே சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்கும் அவர், புதையலை கண்டறிந்து வாழ்வில் செட்டிலாகிவிட வேண்டும் என திட்டம் தீட்டுகிறார். அவரது திட்டத்தில் சிபிராஜும் இணைந்துவிட இறுதியில் புதையலை கண்டறிந்தார்களா? இல்லையா? என்பது தான் 'மாயோன்' படத்தின் திரைக்கதை.

சிபி சத்யராஜ் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தான்யா ரவிச்சந்திரனுக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும், நாயகி என அந்தஸ்துக்காக வந்துசெல்கிறார். ஹரிஷ் பேரடி, கே.எஸ்.ரவிகுமார், பகவதி பெருமாள் (பக்ஸ்), ராதாரவி கதாபாத்திரத்துக்கான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.

வில்லன் கதாபாத்திரத்திற்காக ஆராஷ் ஷா என்பவரை பிரத்யேகமாக இறக்குமதி செய்திருக்கிறார்கள். அடி வாங்குவதற்காகவே அளவெடுத்து செய்தவர் போல வெளிநாட்டிலிருந்து வந்தவர் சிபிராஜிடம் அடிவாங்கிவிட்டு திரும்புகிறார். அந்த கதாபாத்திர வார்ப்பின் அர்த்தம் மட்டும் இறுதிவரை புரியவேயில்லை.

இயக்குநர் கிஷோர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அருண் மொழி மாணிக்கம் படத்திற்கு திரைக்கதை எழுதியும் தயாரித்தும் இருக்கிறார். படத்தின் மூலம், ஆன்மிகம், அறிவியலை கலந்து கொண்டு சேர்த்திருக்க முயற்சித்திருக்கிறார்கள். 'வாழ்க்கையை இரண்டு வகையில் வாழலாம். ஒன்று அற்புதம் அதிசயம் இல்லாதது போல நம்பிக்கொண்டும், மற்றொன்று அற்புதம் அதிசயம் இருப்பது போல நம்பியும்'' என படம் தொடங்குவதற்கு முன்பே ஒரு வசனம் வருகிறது.

அதேபோலத்தான் அறிவியலை நம்பி ஒருக்கூட்டமும், ஆன்மிகத்தை நம்பி ஒரு கூட்டமும் இருப்பது போல காட்டப்படுகிறது. ஆனால், இது தான் உண்மை என்ற எந்தவித முடிவுக்கும் இயக்குநர் செல்லவில்லை. பார்வையாளர்களிடமே முடிவை விட்டுவிடுகின்றனர்.

அறிவியலையும், ஆன்மிகத்தையும் அதற்குரிய காரணங்களை சமன்படுத்தி இருவேறு கதாபாத்திரங்களின் வழியே நியாயத்தை பேசி காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

தவிர, இந்தியாவில் உள்ள சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தி விற்கப்படுவது குறித்தும் பேசப்படுகிறது. படத்தின் முதல் பாதியில் சில காட்சிகள் விஷுவலாக சிறப்பாகவே இருந்தது. படத்தில் பல்வேறு இடத்தில் வரலாறு தொடர்பான விஷயங்களும், அறிவியல் குறித்தும் பேசப்படுகிறது. இரண்டாம் பாதியில் அடர்த்தியான காட்சிகளுக்கு பதிலாக, பழங்கால மாயஜால படங்களில் வரும் காட்சிகளில் அமெச்சூர் காட்சிகள் படத்தை பலவீனப்படுத்துகின்றன.

சிலை கடத்தல், அதற்கு பின்னால் இருக்கும் கும்பல் குறித்து ஓவர் ஹைப் கொடுத்துவிட்டு இறுதியில் அந்த ஹைப் கொடுத்த வில்லன் அடிவாங்க இந்தியா வரும் காட்சிகள் செயற்கை. ஹாலோசினேஷன் பற்றி கொடுக்கப்படும் விளக்கம் கொஞ்சம் கூட ஒட்டவில்லை. தேவையில்லாத காதல் காட்சிகளும், அதையொட்டி வரும் பாடலும் பார்வையாளர்களை திரையரங்கிலிருந்து விரட்டுகிறது. இளையராஜா இந்தப் படத்தில் இசையமைத்து மட்டுமல்லாமல் பாடல்களும் எழுதியிருக்கிறார்.

பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. இரண்டாம் பாதியின் பெரும்பகுதி இருட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் ராம் பிரசாத் தன் உழைப்பைக்கொட்டி திரையில் விருந்து படைக்கிறார்.

விஎஃப்எக்ஸ் காட்சிகள் சில இடங்களில் அப்பட்டமாக தெரிந்தாலும், சில இடங்களில் நிறைவைத்தருகிறது. படத்தில் கூடுதல் ஃபுட்டேஜ்களை எடுக்க மறந்துவிட்டார்களோ என தோன்றுகிறது. காரணம், நிறைய இடங்களில் ஒரே ஷாட்ஸ் மீண்டும் மீண்டும் வருவதை உணர முடிகிறது. சில காட்சிகளில் ஒரு கன்டினியூட்டி இல்லாமல் துண்டு துண்டாக செல்வதையும் காண முடிகிறது.

மொத்தத்தில் 'மாயோன்' அறிவியலின் உதவியால் ஆன்மிக உலகத்துக்குள் அழைத்துச்செல்ல முயன்றிருக்கும் அழுத்தமற்ற சினிமா.

வீடியோ வடிவில் விமர்சனத்தைக்காண :

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE