விஜய் 48: தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரம் ஆனது எப்படி? - ஒரு குட்டி ஸ்டோரி

By ச.கோபாலகிருஷ்ணன்

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் - பாடகியும் சில படங்களை இயக்கியிருப்பவருமான ஷோபா இணையரின் மகனான விஜய் தன் தந்தை இயக்கிய சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் ‘நாளைய தீர்ப்பு’ (1992). சில முன்னணி இதழ்கள் அந்தப் படத்தின் விமர்சனம் என்கிற பெயரில் விஜய்யின் ஒல்லியான உடல் அமைப்பு, நிறம் ஆகியவற்றை வைத்து இழிவுபடுத்தின. ஆனால், அந்த உடல்வாகும் நிறமுமே அவரைத் தமிழர்களுக்கு இன்னும் நெருக்கமானவராக ஆக்கியது.

தந்தை இயக்கிய படங்களில் தொடர்ந்து நடித்துவந்தார் விஜய். அவற்றில் சில படங்கள் வெற்றிபெற்றன. விக்ரமன் இயக்கத்தில் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடிய ‘பூவே உனக்காக’வும் பாசில் இயக்கிய ‘காதலுக்கு மரியாதை’யும் விஜய்யை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்தன. ‘லவ் டுடே’, ‘ஒன்ஸ்மோர்’ ‘ப்ரியமுடன்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘நினைத்தேன் வந்தாய்’ உள்ளிட்ட காதலை மையப்படுத்திய வெற்றிப் படங்கள் விஜய்யைத் தமிழ் சினிமாவில் நாயகனாக நிலைநிறுத்தின. ‘ப்ரியமுடன்’ படத்தில் எதிர்மறை குணாம்சம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய்.

ஏ.வெங்கடேஷ் இயக்கிய ‘பகவதி’ விஜய்யை முழுமையான ஆக்‌ஷன் நாயகனாக அறிமுகப்படுத்தியது. ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாகப் பங்காற்றுவதற்கு ஒல்லியான உடல்வாகு தடை அல்ல என்பது விஜய்யின் மூலம் நிரூபணமானது. அடுத்ததாக செல்வபாரதி இயக்கத்தில் வெளியான ‘வசீகரா’ விஜய்யின் நகைச்சுவைத் திறமையை சிறப்பாக வெளிக்கொண்டுவந்தது.

சில தொடர் தோல்விகளுக்குப் பிறகு கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பில் ரமணா இயக்கிய ‘திருமலை’யின் வெற்றி மூலம் விஜய்யின் திரைவாழ்வில் மீண்டும் ஏற்றம் வந்தது. அதைத் தொடர்ந்து ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘போக்கிரி’ என மிகப் பெரிய வெற்றிப் படங்கள் விஜய்யின் மிகை நாயக பிம்பத்துக்கு வலுசேர்த்தன. இவற்றுக்கிடையில் ‘சச்சின்’ படத்தில் காதல், நகைச்சுவை என விஜய்யின் மென்பரிமாணங்கள் ரசிக்கத்தக்க வகையில் வெளிப்பட்டு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுத்தது.

விஜய்யின் 50ஆம் படமான ‘சுறா’ உட்படத் தொடர்ச்சியாக வந்த சில தோல்விப் படங்களால் விஜய் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கப்பட்டார். 2011இல் வெளியான ‘காவலன்’ படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு காதல், நகைச்சுவைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட படத்தில் நடித்தார் விஜய். இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் விரும்பப்பட்டது.

ஆமீர் கான் நடிப்பில் கல்வி குறித்த பார்வையில் மாற்றங்களை முன்வைத்த ‘த்ரீ இடியட்ஸ்’ படத்தின் தமிழ் மறு ஆக்கம் ‘நண்பன்’. இந்தப் படத்தில் முதல் முறையாக பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன் கைகோத்தார் விஜய். 37 வயதில் கல்லூரி மாணவன் வேடத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தினார். தன் நட்சத்திர பிம்பத்துக்குத் தேவையான எதையும் சேர்க்கச் சொல்லாமல் முழுமையாகக் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் தன்னை ஒப்புக்கொடுத்து விஜய் நடித்த இந்தப் படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களால் மட்டுமல்லாமல் விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது. மிகப் பெரிய வணிக வெற்றியையும் பெற்றது.

விமர்சனரீதியாகப் பாராட்டப்பட்ட வெற்றிப் படங்களைத் தொடர்ச்சியாகக் கொடுத்துவந்த ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்யுடன் இணைந்த ‘துப்பாக்கி’ பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. விடுமுறையில் தன் சொந்த ஊரான மும்பைக்கு வந்து அங்கு தீவிரவாதிகளின் சதியை முறியடிக்கும் ராணுவ வீரனாக இந்தப் படத்தில் நடித்த விஜய் மிகவும் ஸ்டைலிஷான நாயகனாக உருமாறியிருந்தார்.

விஜய்-முருகதாஸ் இணையின் அடுத்த படமான ‘கத்தி’யும் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் விஜய். அதில் ஜீவானந்தம் என்னும் கிராமப்புற நீரியல் அறிவியலாளராக, விவசாயத்தைச் சார்ந்திருக்கும் தன்னுடைய மக்களுக்கு எதையும் செய்ய முடியாத கையறு நிலையை வெளிப்படுத்தும் காட்சிகளில் விஜய்யின் மாறுபட்ட நடிப்புப் பரிமாணம் வெளிப்பட்டது.

சிம்புதேவன் இயக்கத்தில் புதுமையான ஃபேண்டசி கதைக் களத்தில் விஜய் நடித்த ‘புலி’ தோல்வி அடைந்தது. சமூக ஊடகங்களில் பெரிதும் கிண்டலுக்கும் உள்ளானது. ஆனால், அதற்குப் பிறகு அட்லி இயக்கிய ‘தெறி’ விஜய்யை மிடுக்கும் வீரமும் மிக்க போலீஸ் நாயகனாகக் காண்பித்ததோடு மிகப் பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. இதற்குப் பிறகு விஜய் நடித்த படங்கள் அனைத்தும் விமர்சனரீதியாக எப்படி இருந்தாலும் வசூலில் புதிய சாதனைகளை நிகழ்த்திவருகின்றன.

மத்திய அரசின் சில திட்டங்களை விமர்சித்த ‘மெர்சல்’ (2017), அரசியல்ரீதியான சர்ச்சைகளை எதிர்கொண்டது. விஜய்யின் கிறிஸ்தவ மத அடையாளம் காரணமாக அவர் மீது மதவாதிகள் சிலர் வசைத் தாக்குதல் நடத்தினர். அதற்கு எதிர்வினையாக விஜய்க்குப் பெருகிய ஆதரவு அவரை இன்னும் பெரிய நட்சத்திரமாக உயர்த்தியது.

கரோனா முதல் அலை ஓய்ந்த பிறகு வெளியான ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றி ஊரடங்கால் நலிவடைந்திருந்த திரையரங்கு வணிகத்துக்கு மீண்டும் உயிர்கொடுத்தது. விஜய் நடித்து கடைசியாக வெளியாகியுள்ள ‘பீஸ்ட்’ ரசிகர்களின் வரவேற்பைப் பெறவில்லை. சமூக வலைத்தளங்களில் கடும் கிண்டலுக்கு உள்ளானது. ஆனால் விஜய் ஒரு தோல்வியைக் கொடுத்தால் அடுத்து அதை ஈடு செய்யும் வகையிலான பிரம்மாண்ட வெற்றியைக் கொடுப்பார்.

நேரடித் தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துவந்த விஜய் தற்போது முதல் முறையாக தமிழ்-தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகிவரும் ‘...’ படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்துக்காக தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குநர் வம்சி பைடிபள்ளி என தெலுங்கு சினிமா ஆளுமைகளுடன் விஜய் கைகோத்துள்ளார்.

இந்திய சினிமாவில் அபாரமான நடனத் திறமை மிக்க நாயக நடிகர்கள் பட்டியலில் விஜய்க்கு முக்கிய இடம் உண்டு. அதுவும் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிப்பதற்கு நடனத் திறமை அடிப்படைத் தகுதிகளில் ஒன்றாக மாறியதற்கு விஜய்யின் வெற்றியும் ரசிகர்கள், குறிப்பாக இளைஞர்களிடையே அவருக்கு இருக்கும் செல்வாக்குமே முக்கியக் காரணம்.

நடனத்தைப் போலவே நகைச்சுவைத் திறனும் விஜய்யின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளது. கவுண்டமணி, வடிவேலு, விவேக், சார்லி, தாமு, சந்தானம், யோகிபாபு எனப் பெரும்பாலான முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்களுடனும் விஜய்க்கு சிறப்பான நகைச்சுவைக் காட்சிகள் அமைந்துள்ளன. ‘மின்சாரக் கண்ணா’, ’தமிழன்’, ‘கில்லி’, ‘வசீகரா’, ‘காவலன்’ உள்ளிட்ட பல படங்களில் பிரதான நகைச்சுவை நடிகர் இல்லாத காட்சிகளிலும் விஜய் மட்டுமே நகைச்சுவையால் ரசிகர்களைச் சிரிக்க வைத்திருக்கிறார்.

‘காதலுக்கு மரியாதை’ (1997), ‘துள்ளாத மனமும் துள்ளும்’(1999), ‘திருப்பாச்சி’ (2005) ஆகிய படங்களுக்காகத் தமிழ்நாடு அரசின் விருதுகளை வென்றுள்ளார் விஜய். 1998இல் கலைமாமணி பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டைத் தாண்டி இன்று தென்னிந்தியா முழுவதும் மிக அதிக எண்ணிக்கையிலான ரசிகார்களையும் மிகப் பெரிய சந்தை மதிப்பையும் கொண்ட நட்சத்திரமாக உயர்ந்து நிற்கிறார் விஜய். குறிப்பாக கேரளத்தில் விஜய்க்கென்று மிகப் பெரிய எண்ணிக்கையில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ரசிகர் மன்றங்களும் செயல்படுகின்றன.

ஒரு காலகட்டம் வரை விஜய், அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமே ஆன ஒரே மாதிரியான படங்களில் நடிப்பவர் என்னும் பார்வை நிலவியது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் விஜய், அவர் நடிக்கும் படங்கள் குறித்த பார்வை முற்றிலும் மாறியிருக்கிறது. தன்னுடைய ரசிகர்களைத் தாண்டி பொதுவான சினிமா பார்வையாளர்களின் நன்மதிப்பைப் பெற்ற நட்சத்திரமாக அவர் உயர்ந்துவிட்டார். அதற்கு அவருடைய கதைத் தேர்வும் நாயக நடிகராகத் தன் தகுதியைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருப்பதுமே முக்கியக் காரணம்.

இன்று 48 வயதை நிறைவுசெய்யும் விஜய்யின் தோற்றத்தில் வயதுக்கேயுரிய முதுமை இல்லை. அறிமுகப் படத்தில் தோற்றத்துக்காக விமர்சிக்கப்பட்டவர் இன்று இளமையான தோற்றத்தையும் கட்டுக்கோப்பான உடலையும் பேணுவது அவருடைய தனிச் சிறப்புகளில் ஒன்றாக 90ஸ் கிட்ஸையும் 2கே கிட்ஸையும் ஈர்த்துள்ளது. அவரை தென்னிந்தியர்களின் ஃபிட்னஸ் முன்னோடியாகவும் ஆக்கியுள்ளது.

| வாசிக்க > ‘மாஸ்’ மட்டும் அல்ல... விஜய்யிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன? | விஜய் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு |

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்