நடிகை சாய் பல்லவி மீது ஹைதாராபாத் போலீஸில் புகார்

By செய்திப்பிரிவு

சாய் பல்லவிமீது ஹைதாராபாத் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சாய் பல்லவியின் அடுத்தப் படமான ‘விரத பர்வம்’ ஜூன் 17-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், அப்படம் தொடர்பான நேர்காணல்களில் சாய் பல்லவி பங்கேற்று வருகிறார். அவ்வாறான ஒரு பேட்டியில், “நான் நடுநிலையான சூழலில் வளர்ந்தேன். இடதுசாரி, வலதுசாரி என இரண்டையும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எது சரி, எது தவறு என்று கூற முடியாது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை காண்பித்தார்கள்.

கரோனா லாக்டவுன் காலத்தில் ஒரு சம்பவம் நடந்தது. மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற நபரை கும்பல் ஒன்று முஸ்லிம் என்று சந்தேகித்து அவரை அடித்துக் கொன்றது. மேலும், அவரை நோக்கி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறுமாறு கோஷமிடச் செய்தனர். இதற்கும் காஷ்மீரில் நடந்ததற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? இரண்டும் வன்முறைதான்." என்று தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில், தற்போது சாய் பல்லவி மீது ஹைதராபாத் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விஸ்வ இந்து பரிஷத் இயக்கத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த அகில் என்ற நபர் சாய் பல்லவி மீது ஹைதராபாத் சுல்தான் பஜார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பசு பாதுகாவலர்களையும், காஷ்மீரி தீவிரவாதிகளையும் சாய் பல்லவி ஒப்பிட்டு பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை வேண்டும் என அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. சாய் பல்லவி மீது மட்டுமல்ல, ‘விரத பர்வம்’ இயக்குநர் வேணு உடுகுலா மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE