‘மஞ்சு’ கதாபாத்திரம் இன்றும் உயிர்ப்புடன் இருப்பது எப்படி? - ‘அவள் அப்படித்தான்’ விரைவுப் பார்வை

By செய்திப்பிரிவு

அசாத்தியமானவள்: 'மஞ்சு' கதாபாத்திரம், அதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒரு புதுவித பாத்திரப் படைப்பு. பெண்கள் குறித்து சமூகம் வரையறுத்து வைத்துள்ள வழக்கமான டெம்ப்ளேட்டுகளான அடக்கம், அமைதி, கீழ்படிதல், சிணுங்கல் என்ற எதையுமே அந்தக் கதாபாத்திரத்தில் ஒரு காட்சியிலும் காண முடியாது. படம் நெடுங்கிலும் மஞ்சுவாக நடித்துள்ள ஸ்ரீப்ரியாவின் உடல்மொழியில் எப்போதும் ஒரு கெத்து ஒட்டிகொண்டேயிருக்கும்.

அதேபோல, எந்த இடத்திலும் பதற்றத்துடனோ, பயத்துடனோ, அழுதுகொண்டேயிருக்கும் பெண்ணாக மஞ்சுவை பார்க்கவே முடியாது. சொல்லப்போனால் இதுபோன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய தேவையான அனைத்து காரணங்களும் அவளிடம் இருக்கும். ஆனால், அவள் அப்படியில்லை. ஏனென்றால் 'அவள் அப்படித்தான்'!

'ப்ரிமேரிடல் செக்ஸ்' என ஒரு பெண் பேசுவதெல்லாம் 1978-களில் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. அந்தக் காலக்கட்டத்தில் 'மஞ்சு' கதாபாத்திர வார்ப்பைக் கண்டு விதந்தோத வேண்டியிருக்கிறது. பெண் கல்வி, வேலை மறுதலிக்கப்பட்ட ஒரு காலத்தில் வெளியிடப்பட்ட தைரியமான படைப்பாகத்தான் 'அவள் அப்படித்தான்' படத்தை பார்க்க வேண்டியிருக்கிறது.

சமூகத்தில் சிலர்: மஞ்சுவைப் பொறுத்தவரை அவள் எதற்கும் கவலைப்படாதவள். வேலை இழந்து நிற்கும் காட்சியில்கூட, 'வேல தானே போச்சு... எழவா விழுந்துச்சு' என அசால்டாக கடப்பவள். எல்லாவற்றையும் லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் அந்தக் கதாபாத்திரம் ஒரு கற்பனை முகம் என்று கடந்துபோய்விட முடியாது. அவர்போல் உண்மை முகத்துடன் நம் சமூகத்தில் நிஜ உருவில் மிகச் சிலர் வலம் வருவது ஆறுதலுக்கு உரியது.

மஞ்சுவுக்கு தன்னை கிண்டல் செய்யும் ஒருவரின் பின்னால் நின்று கண்ணை கசக்கிக் கொண்டு அழத் தெரியாது. எதுவாக இருந்தாலும் நேரடியாக எதிர்த்து பேசுவதுதான் அவளின் குணம். ''கண்ட கண்ட ஆம்பளைங்க கூட சுத்துறா. செக்ஸ பத்தி பேசுறா'' என்று தன் முதுக்குக்குப் புறம்பேசும் சக அலுவலக பெண்ணின் முகத்துக்கு நேரடியாக 'தேவைப்பட்டா உங்க புருஷன்கூட சுத்துவேன்' என்று திக்குமுக்காட வைப்பாள்.

சராசரி பெண்ணின் பிம்பம்: உண்மையில், எல்லா பெண்களுக்குள்ளும் இருக்கும் ஒரு நிழல் கதாபாத்திரம்தான் மஞ்சு. சமூகத்தின் அழுத்தங்களால் மஞ்சுக்கள் அடிபணிந்து கிடக்கிறார்கள். காதலன் ஏமாற்றியபோதும் அவளிடம் போய், 'ஏத்துக்கோ' என்று இறைஞ்சி நிற்காத யாருக்கும் வளைந்து கொடுக்காதவளுக்கு ஏற்ற க்ளைமேக்ஸைத்தான் ருத்ரய்யா எழுதியிருப்பார். காலம் கடந்து வந்து சேர்ந்த ஒரு புதிய உறவு இறுதியில் பிரிந்து செல்லும்போது கூட அவள் அதை ஏற்றுக்கொண்டு கடக்கும் மனவலிமை மிக்கவள்.

இறுதிக்காட்சியில், கமலின் மனைவியிடம் பேசும் மஞ்சு, 'பெண் சுதந்திரம் பற்றி என்ன நினைக்கிறீங்க' என்று கேட்பாள். அதற்கு அந்தப் பெண், 'அதபத்தி எனக்கு எதுவும் தெரியாது' என்றவுடன் 'அதனாலதான் நீங்க சந்தோஷமா இருக்கீங்க' என்று பேசும் வாக்கியம் அடர்த்தியானது!

அவள் அப்படித்தான்: ''எரிந்து போன வீடு; முறிந்து போன உறவுகள்; களைந்து போன கனவுகள்; சுமக்க முடியாத சோகங்கள்; மீண்டும் ஒருமுறை மஞ்சு இறந்துபோனால், இந்த சாவை சகித்துக்கொள்ள மஞ்சுவாள் தான் முடியும். அவள் பிறப்பாள், இறப்பாள்.. அவள் அப்படித்தான்!'' என்ற இறுதி வசனம் ஒலிக்க தனியாக நின்றுகொண்டிருப்பாள் மஞ்சு... உண்மையில் மஞ்சு அப்படித்தான்!

அவள் அப்படித்தான் குறித்து இன்னும் விரிவாகப் பேசும் வீடியோ ஸ்டோரி இங்கே...

> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE