“காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்படுவது, மாட்டிறைச்சிக்காக கொல்வது... இரண்டும் வன்முறையே!” - சாய் பல்லவி

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: “காஷ்மீர் பண்டிட்களை கொல்வதும், மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்பதற்காக ஒருவரை கொல்வதும் ஒன்றுதான். இரண்டுக்கும் வித்தியாசமில்லை” என்று நடிகை சாய் பல்லவி கருத்து தெரிவித்துள்ளார்.

சாய் பல்லவியின் அடுத்தப் படமான ‘விரத பர்வம்’ ஜூன் 17-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், அப்படம் தொடர்பான நேர்காணல்களில் சாய் பல்லவி பங்கேற்று வருகிறார்.

அவ்வாறான ஒரு பேட்டியில், “நான் நடுநிலையான சூழலில் வளர்ந்தேன். இடதுசாரி, வலதுசாரி என இரண்டையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் எது சரி, எது தவறு என்று கூற முடியாது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை காண்பித்தார்கள்.

கரோனா லாக்டவுன் காலத்தில் ஒரு சம்பவம் நடந்தது. மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற நபரை கும்பல் ஒன்று முஸ்லிம் என்று சந்தேகித்து அவரை அடித்துக் கொன்றது. மேலும், அவரை நோக்கி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறுமாறு கோஷமிடச் செய்தனர். இதற்கும் காஷ்மீரில் நடந்ததற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? இரண்டும் வன்முறைதான்.

என் குடும்பத்தினர் என்னை நல்ல மனிதராக இருக்க கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை நீங்கள் பாதுகாக்க வேண்டும். அவர்களின் அந்தஸ்து முக்கியமில்லை” என்று தெரிவித்தார்.

சாய் பல்லவியின் இக்கருத்தை நெட்டிசன்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE