தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை சுற்றும் சர்ச்சை

By செய்திப்பிரிவு

தெலுங்கு சினிமா நடிகரான அல்லு அர்ஜூன் விளம்பர படத்தில் நடித்து தவறான தகவலை பரப்பியதற்காக அவர் மீது நடவடிக்கை கோரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான 'புஷ்பா' திரைப்படம் மூலம் பான் இந்தியா நடிகராக மாறியிருக்கிறார் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன். அண்மையில் புகையிலைத் தொடர்பான விளம்பரம் ஒன்றில் இவர் நடிக்க மறுத்ததற்காக ரசிகர்கள் பலரும் அல்லு அர்ஜூனுக்கு பாராட்டு தெரிவித்தனர். ஆனால், இதனிடையே இவர் நடிக்கும் விளம்பர படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'ரேபிடோ' விளம்பரம் ஒன்றில் அல்லு அர்ஜூன் நடித்தார். அந்த விளம்பரத்தில் தெலங்கானா மாநில சாலை போக்குவரத்து குறித்து தவறாக சித்தரித்ததாக கூறி இவர் மீது சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக அதன் நிர்வாக இயக்குநர் எச்சரிக்கை செய்தார்.

இந்நிலையில் தற்போது, ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்கள் குறித்த விளம்பரம் ஒன்றில் அல்லு அர்ஜூன் நடித்துள்ளார். அதில் ஐஐடி மற்றும் என்ஐடி தரவரிசை குறித்து கூறப்பட்டுள்ளது. அது தவறான தரவரிசை தகவல் எனக் கூறி, சமூக ஆர்வலரான கோதா உபேந்தர் ரெட்டி என்பவர், அல்லு அர்ஜுன் மீது ஹைதராபாத் ஆம்பர்பேட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுபோன்ற தவறான விளம்பரங்களை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE