'ஜெய் பீம்' மூலம் கவனம் பெற்ற பார்வதி அம்மாவிற்கு உதவிய ராகவா லாரன்ஸ்

By செய்திப்பிரிவு

'ஜெய்பீம்' படம் மூலம் கவனம் பெற்ற பார்வதி அம்மாவிற்கு வீடு கட்டி கொடுப்பதற்காக ஒதுக்கிய தொகையை, அவரை சந்தித்து நேரில் வழங்கினார் நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ்.

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'ஜெய்பீம்' திரைப்படம் காவல்துறையின் லாக்அப் மரணத்தால் நிகழ்ந்த கொடூரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப்படத்தின் நிஜ மாந்தர்களான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் வறுமையில் வாடி வருவதாக தகவல் வெளியானது. இதையறிந்த ராகவா லாரன்ஸ், பார்வதி அம்மாவுக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்தார்.

சென்னை புறநகரான முகலிவாக்கத்தில் தன்னுடைய மகள் வீட்டில் வசித்து வந்த பார்வதி அம்மாவை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ், அவருக்கு ரூ.1 லட்சம் வழங்கியதோடு, அவருக்கு வீடு கட்டிக் கொடுக்க விரும்புவதையும் அவரிடம் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகில் உள்ள, கீழ நத்தம் என்ற கிராமத்தில் பார்வதி அம்மாளின் மகளுக்கு நிலம் உள்ளது என்றும், அந்த இடத்தில் வீடு கட்டித் தரும்படி அவரிடம் கேட்டுக்கொண்டனர்.

அதன்படி கீழநத்தம் கிராமத்துக்கே சென்று வீடு கட்டுவதற்கான நிலத்தை பார்வையிட்டு வந்ததோடு, அங்கே வீடு கட்டும் பணியைத் தொடங்கும் முயற்சியில் ராகவா லாரன்ஸ் இறங்கிய நேரத்தில், பார்வதி அம்மாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டித்தர இருப்பதாக தகவல் வெளியானது.

பார்வதி அம்மாவின் வறுமை நிலையை அறிந்து அவருக்கு வீடு கட்டிக்கொடுக்க முன்வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரன்ஸ் நன்றி தெரிவித்திருந்தார். அதேநேரம், பார்வதி அம்மாவுக்கு வீடுகட்டிக் கொடுப்பதற்கு ஒதுக்கிய தொகையை அவர்களுக்கு பணமாக வழங்க லாரன்ஸ் திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, பார்வதி அம்மாவின் குடும்பத்தினரை தனது அலுவலகத்துக்கு அழைத்து, பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித் தருவதற்காக ஒதுக்கிய தொகையை பார்வதி அம்மா, மற்றும் அவருடைய மூத்த மகன் மாரியப்பா, இளைய மகன் ரவி, மகள் சின்னப்பொண்ணு ஆகியோருக்கு பிரித்து வழங்கினார். பார்வதி அம்மாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நல்லது நடப்பதற்கு காரணமாக இருந்த ஜெய்பீம் படக்குழுவினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE