‘சாம்ராட் பிருத்விராஜ்’ காட்சிகள் ரத்து: பட்ஜெட் ரூ.200 கோடி... ஒரு வார வசூல் ரூ.55 கோடி மட்டுமே!

By செய்திப்பிரிவு

அக்‌ஷய் குமாரின் 'சாம்ராஜ் பிருத்விராஜ்' திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் ரூ.55 கோடியை மட்டுமே வசூலித்து திரையரங்குகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான கங்கனா ரனாவத்தின் 'தாகத்' திரைப்படமும் இப்படியான தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

மன்னர் சாம்ராட் பிருத்விராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படம் 'சாம்ராட் பிருத்விராஜ்'. சந்திரபிரகாஷ் திவேதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடித்துள்ளார். 2017-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லர் அவரது மனைவியாக நடித்துள்ளார். இவர்களைத் தவிர சஞ்சய் தத், அசுவதோஷ் ராணா, லலித் திவாரி உட்பட ஏராளமானோர் இதில் நடித்துள்ளனர்.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 'சாம்ராட் பிருத்விராஜ்' படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜூன் 3-ம் தேதி வெளியானது. சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்திற்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் வரி விலக்கும் அளிக்கப்பட்டிருந்தன. படம் வெளியான முதல் நாளே இந்திய அளவில் 'சாம்ராட் பிருத்விராஜ்' திரைப்படம் ரூ.10.70 கோடியை மட்டுமே வசூலித்தது.

ரூ.200 கோடிக்கும் மேல் தயாரிக்கப்பட்டிருந்த இந்தப் படம் மொத்தம் ரூ.55.05 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளது. ஜூன் 3 முதல் 9 வரையிலான ஒரு வார வசூல் வெறும் ரூ.55.05 கோடி என்பது படத்தின் தயாரிப்பாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

தவிர, படத்துக்கான டிக்கெட்டுகள் எதுவும் விற்பனை ஆகாததால், படம் வெளியான முதல் வாரத்திலேயே திரையரங்குகளிலிருந்து 'சாம்ராஜ் பிருத்விராஜ்' திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை தமிழில் வெளியான கமலின் 'விக்ரம்' மற்றும் தெலுங்கில் வெளியான 'மேஜர்' படங்கள் நிரப்பியுள்ளன. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.

பாலிவுட் சினிமா இப்படியான சூழலுக்கு தள்ளப்படுவது முதன்முறையல்ல. அண்மையில் வெளியான கங்கனா ரனாவத்தின் 'தாகத்' திரைப்படம் வெளியான 8-வது நாளில் வெறும் 20 டிக்கெட்டுகளை மட்டுமே விற்று 4,400 ரூபாயை வசூலித்தது. இதையடுத்து படம் திரையரங்குகளிலிருந்து நீக்கப்பட்டது. 'சாம்ராஜ் பிருத்விராஜ்', 'தாகத்' இரண்டு படங்களும் அண்மையில் வெளியான பாலிவுட் சினிமாக்களில் பெரும் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE